தமிழ், தெலுங்கு படங்களை குறிவைக்கும் இந்தி சினிமா

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

தமிழ், தெலுங்கு படங்களை குறிவைக்கும் இந்தி சினிமா

7/27/2011 10:43:43 AM

தமிழ், தெலுங்கில் ஹிட்டான படங்களை ரீமேக் செய்யும் போக்கு இந்தியில் தற்போது அதிகரித்துள்ளது. பிறமொழியில் ரிலீசான படங்களை வேறு மொழியில் ரீமேக் செய்வது வழக்கமான ஒன்றுதான். பொதுவாக, 90 சதவிகித கன்னடப் படங்கள், தமிழ், தெலுங்கு, இந்தி பட ரீமேக்காகவே இருக்கின்றன. இதே பார்முலாவை இந்தி சினிமா இப்போது கையில் பிடித்துள்ளது. அதாவது தமிழ், தெலுங்கில் ஹிட்டான படங்களை ரீமேக் செய்வதற்கு இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் இப்படி ரீமேக் செய்யப்பட்ட படங்கள் ஹிட்டானதால் இந்த மோகம் இன்னும் அதிகரித்துள்ளது.

சூர்யா, அனுஷ்கா நடிப்பில் ஹிட்டான 'சிங்கம்', அதே பெயரில் இந்தியில் தயாராகியுள்ளது. இந்தப் படத்துக்கான ஓபனிங் வழக்கமான படங்களை விட அதிகரித்துள்ளது. இதே போல 'காவலன்' படம் சல்மான் நடிப்பில் 'பாடிகார்ட்' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்துக்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதே போல ஏழு படங்கள் இந்தியில் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. தெலுங்கிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட 'உத்தமபுத்திரன்', இந்தியில் 'ரெடி' என்ற பெயரில் ரிலீஸ் ஆகி வசூலை அள்ளியுள்ளது. அடுத்து தெலுங்கில் 'கிக்'காகவும் தமிழில் 'தில்லாலங்கடி'யாகவும் வெளியான படம், சல்மான் கான் நடிப்பில் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இதே போல, ஜெயம் ரவி, ஜெனிலியா நடித்த 'சந்தோஷ் சுப்ரமணியம்' (தெலுங்கில் பொம்மரிலு) ஹர்மான் பவேஜா, ஜெனிலியா நடிப்பில் 'இட்ஸ் மை லைஃப்' என்ற பெயரில் தயாராகிறது. கார்த்தி நடித்த 'சிறுத்தை' (தெலுங்கில் விக்ரமார்க்குடு) அக்ஷய்குமார் நடிப்பில் இந்தியில் 'ரவுடி ரத்தோர்' என்ற பெயரில் உருவாகிறது. இதை பிரபுதேவா இயக்க உள்ளார்.

இதே போல சூர்யா, ஜோதிகா நடிப்பில் ஹிட்டான 'காக்க காக்க' படம் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா நடிப்பில் 'ஃபோர்ஸ்' என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ஹிட்டான 'காதல்' படத்தை இந்தி இயக்குனர் விக்ரமாதித்யா மோத்வான், இயக்க உள்ளார். இதுதவிர, 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இந்தி ரீமேக்கை, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். ''ஏற்கனவே ஹிட்டான படங்களை ரீமேக் செய்வதால், ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஆக்ஷன், சென்டிமென்டுடன் கமர்சியல் விஷயங்களையும் தென்னிந்திய படங்கள் சரியாக கலந்து கொடுப்பதால் படம் ஹிட்டாகும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். கடந்த சில வருடங்களில் வெளியான 'கஜினி', 'வான்டட்' ஆகிய ரீமேக் படங்கள் இந்தியில் வசூலில் சாதனை புரிந்துள்ளன. அதனால் தமிழ், தெலுங்கு பட ரீமேக்குக்கு இந்தியில் மவுசு ஏற்பட்டுள்ளது'' என்று விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்தார். தமிழ், தெலுங்கு ரீமேக் படங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பதால் ரீமேக் உரிமையின் விலையையும் தயாரிப்பாளர்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

Post a Comment