மாவட்டம் தோறும் ரசிகர்களைச் சந்திப்பார் ரஜினி-முத்துராமன் தகவல்

|


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது புதிய அவதாரத்தை விரைவில் உலகுக்கு அறிவிக்கப் போகிறார்.

இத்தனை நாளும் தலைவர் தங்களைப் பார்ப்பாரா என ஏங்கிக் கிடந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இனி மாவட்டம்தோறும் அவரே வந்து ரசிகர்களைச் சந்திக்கப் போகிறார்.

இந்த தகவலை ரஜினிக்கு மிக நெருக்கமான எஸ்பி முத்துராமன் நேற்று திருப்பூரில் அறிவித்தார்.

நடிகர் ரஜினி உடல் நலம் பெற்றுள்ளதை அடுத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருப்பூரில் உள்ள சாமுண்டிபுரம் ரஜினிகாந்த் திருமண மஹாலில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கலந்து கொண்டு ஏழைகளுக்கு 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் அவர் பேசும்போது, "ரஜினி ரசிகர்களின் பொது நல சேவைகள் தொடர வேண்டும். அவர்கள் ரஜினியின் புகழ் பாடுவதை விட அவர் பெயரில் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

ரஜினிகாந்த் விரைவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் வந்து மாநாடு நடத்தி ரசிகர்களையும், பொது மக்களையும் நேரில் சந்தித்து பேசுகிறார்.

ரஜினியை தெய்வங்கள் காப்பாற்றியது என்று கூறுவதை விட ரஜினிக்காக சிறப்பு பூஜைகள், பிரார்த்தனை செய்த ரசிகர்கள்தான் தெய்வங்களாக நின்று காத்தார்கள். ரசிகர்களின் பிரார்த்தனையால்தான் ரஜினி குணமடைந்து உயிர் வாழ்கிறார்.

ரசிகர்கள் அனைவரும் மனம் மகிழும் வண்ணம் அவர் பல புதிய அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறார்," என்றார்.

இந்த விழாவில் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூரும் பங்கேற்றார்.

சென்னை தலைமை மன்ற நிர்வாகி என் ராமதாஸ், பெங்களூரிலிருந்து கோபிநாத் ராவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

Post a Comment