சக்சேனாவுக்கு இரண்டாவது வழக்கில் ஜாமீன்!

|


சென்னை: சன் பிக்சர்ஸ் சக்சேனாவுக்கு இரண்டாவது வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. இன்னும் இரு வழக்குகளில் அவர் ஜாமீன் பெற வேண்டும். ஆனால் அதற்குள் மேலும் சில வழக்குகள் பாயும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் உரிமம் கொடுப்பது தொடர்பான விவகாரத்தில் தன்னை தாக்கிய சண்முகவேல் என்பவர் கொடுத்த புகாரில் சக்சேனாவை கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் சக்சேனா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி தேவதாஸ் விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தேவதாஸ், சக்சேனாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சக்சேனா ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும் அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் வழங்க வேண்டும். மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில், காலையிலும் மாலையிலும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

ஏற்கனவே செல்வராஜ் என்ற சினிமா விநியோகஸ்தரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சக்சேனாவை கே.கே.நகர் போலீசார் கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் சக்சேனாவுக்கு ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது. இப்போது 2-வது வழக்கிலும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

அவர் மீது இன்னும் 2 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவற்றில் அவர் இன்னும் ஜாமீன் பெறவில்லை என்பதால், சிறையிலிருந்து இப்போதைக்கு அவரால் வெளிவர முடியாது.

அதேநேரம், காவலன் படம் தொடர்பாக சக்சேனா மீது புதிய புகார் தர சிலர் தயாராகி வருகின்றனர்.
 

Post a Comment