7/4/2011 2:57:11 PM
எஸ்.எம்.எஸ் டாக்கீஸ் சார்பில் ஆர்.ராஜேஷ் தயாரிக்கும் படம், 'பதினெட்டான்குடி'. பிருத்வி, ஸ்ரீநிஷா நடிக்கிறார்கள், என்.சுந்தரேசன் இயக்குகிறார். சரவணன்கணேஷ் இசை அமைத்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடலை வெளியிட்டு இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது: இனிமேல் மேடை ஏறி மைக் பிடித்து பேசக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் பாண்டியராஜனின் மகன் நடிக்கும் படம் என்பதால் எனது விரதத்தை உடைத்து பேசுகிறேன். இயற்கையில் நான் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். உணர்ச்சிவசப்படுபவன்தான் கலைஞன். மேடையில் பேசும்போது உணர்ச்சி வசப்பட்டுவிட்டால் எதையாவது உளறிக் கொட்டிவிடுகிறேன். அது பிரச்னையாகி விடுகிறது. இன்றைய இளம் இயக்குனர்கள் மீது எனக்கு கோபம் இருந்தது. அது இப்போது மறைந்து விட்டது. அவர்கள் என்னை அப்பா என்கிறார்கள். அப்பா பிள்ளைகளுக்குள் சண்டை வருவது சகஜம்தானே.
6 முறை தேசிய விருது வாங்கினேன். அவை எங்கே இருக்கிறது என்று தெரியாது. தூக்கி போட்டுவிட்டேன். பத்மஸ்ரீ விருதை கூட மறுத்தேன். எந்த வெற்றியையும், விருதையும் தலையில் ஏற்றி வைத்துக் கொள்ளவில்லை. கலைஞனுக்கு கிடைக்கும் வெற்றி முள்கிரீடம் போன்றது. அதை தலையில் அணிந்து கொண்டால் முள் குத்தி வண்டு நுழைந்து, கலைஞன் அழிந்து விடுவான். ஏறிய வேகத்தில் அதை இறக்கி வைப்பவன்தான் வெற்றி பெறுவான். இன்றைய சில இளம் இயக்குனர்கள் ஒரு படத்தின் வெற்றியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தோற்றம், நடை, உடை, பாவனை, பந்தா அனைத்திலும் மாறிவிடுகிறார்கள். ஸ்ரீதர், நாகேஷ் இவர்கள் செய்யாத சாதனையா?, கருப்பு வெள்ளை காலத்தில் சாதித்தவர்கள் யாரும் தங்களை சாதனையாளனாக கடைசி வரை நினைக்கவில்லை.
நான் இடுப்பில் தூக்கி வளர்த்த பிள்ளையின் மகன்தான் இந்தப் படத்தின் ஹீரோ. காலங்கள் மாறிவிட்டது. ஆனாலும் நான் இன்னும் ஈரத்தோடு இருக்கிறேன். இளைஞர்களோடு இருக்கிறேன். அவர்கள் என்னோடு இருக்கிறார்கள். இந்த இருப்பை நிலைநாட்டிக்கொள்ள நானும் அவர்களோடு போட்டிப்போட தயாராகி விட்டேன்.
தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையோடு, களத்தோடு வருகிறேன். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில், மண்வாசனை, முதல் மரியாதை எப்படி இதுவரை ஈரத்தோடு இருக்கிறதோ, அதேபோல இன்னும் 20 வருடம் ஈரத்தோடு இருக்கும் படைப்போடு வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஜெயம் ரவி, சாந்தனு, சிங்கப்புலி, பாடலாசிரியர் சினேகன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். முன்னதாக பாண்டியராஜன் வரவேற்றார். முடிவில் பிருத்வி நன்றி கூறினார்.
Post a Comment