7/11/2011 10:07:36 AM
போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க, சமீப காலமாக ஹீரோக்களிடம் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 'சிங்கம்' படத்தில் சூர்யா நடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே கேரக்டரை இந்தியில் அஜய்தேவ்கன் நடித்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'சிறுத்தை' படத்தில் அவர் ஏற்ற போலீஸ் வேடமும் வரவேற்பை பெற்றது. இந்த கேரக்டரை இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய்குமார் செய்கிறார்.
'யுத்தம் செய்' படத்தில் சேரன் சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரியாக நடித்தார். 'விருத்தகிரி'யில் விஜயகாந்த்தும் 'பயணம்' படத்தில் நாகார்ஜுனாவும், பிரகாஷ்ராஜும் அதிரடிப்படை அதிகாரிகளாக நடித்தார்கள். 'பவானி' படத்தில் சினேகா பெண் போலீஸ் அதிகாரியாக நடித்தார். மிடுக்கான நடை, ஸ்டைலான மேனரிசம் போன்றவற்றை காட்ட முடியும் என்பதாலும் லாஜிக் மீறாத ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கலாம் என்பதாலும் போலீஸ் அதிகாரிகள் கேரக்டரில் நடிக்க ஹீரோக்களுக்கு ஆர்வம் இருக்கிறது.
தற்போது தயாரிப்பில் உள்ள 'வித்தகன்' படத்தில் பார்த்திபனும், 'ஒஸ்தி' படத்தில் சிம்புவும் போலீஸ் அதிகாரிகளாக நடித்து வருகிறார்கள். ரிலீஸ் ஆக உள்ள 'மாசி' படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றுள்ளார். போலீஸ் அதிகாரிகள் கேரக்டரில் நடிக்க ஹீரோக்கள் ஆர்வமாக இருப்பதால், பெரிய ஹீரோக்களுக்கு பொருந்துகிற போலீஸ் அதிகாரிகள் கேரக்டர் கொண்ட கதைகளை உதவி இயக்குனர்கள் வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடி வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகள் கேரக்டரில் ஹீரோக்கள் நடிக்கும் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெறுகிறது என்கிற சென்டிமென்டும் இந்த டிரண்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Post a Comment