7/13/2011 3:37:10 PM
சிறுநீரக பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், சிங்கப்பூரில் இருந்து இன்று இரவு சென்னை திரும்புகிறார். 2 மாதங்களுக்கு முன் சிறுநீரக பிரச்னை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து சிங்கப்பூரிலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார் ரஜினி. டாக்டர்கள் அறிவுரைப்படி அங்கு ஒரு மாதம் ஓய்வில் இருந்தார். அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா உடன் இருந்து ரஜினியை கவனித்துக் கொண்டனர். உடல் நலம் தேறியதையடுத்து சென்னைக்கு திரும்ப ரஜினி முடிவெடுத்தார். இன்று இரவு சிங்கப்பூரில் இருந்து குடும் பத்தாருடன் விமானம் மூலம் அவர் சென்னை திரும்புகிறார். இரவு 10.30 மணிக்கு அவர் சென்னை வந்து சேருகிறார்.
போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு முதலில் செல்வார் என்றும் பின்னர் கேளம்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் ஒரு மாதம் ஓய்வெடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளார் என்றும் தெரிகிறது. பண்ணை வீட்டில் இருக்கும் சமயத்திலேயே, இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருடன் ÔராணாÕ பட டிஸ்கஷனில் அவர் கலந்து கொள்வாராம். இதையடுத்து ÔராணாÕ ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்கும் காட்சிகள் செப்டம்பரில் படமாகும் என்று கூறப்படுகிறது.
ரசிகர்களை சந்திக்கிறார்
ரஜினி உடல் நலம் குன்றியபோது, ரசிகர்கள் வேதனையடைந்தனர். இதையடுத்து அவர் பூரண குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். ரஜினியின் வீட்டிலும் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள ரஜினியின் அண்ணன் வீட்டிலும் ஹோமம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இப்போது ரஜினி குணமாகி திரும்புவதையடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். அவரை நேரில் பார்க்கும் ஆவலிலும் உள்ளனர். ரசிகர்களை விமான நிலையத்திலேயே ரஜினி சந்திக்கிறார். லதா ரஜினி வெளியிட்ட அறிக்கையில், Ôரஜினியை பார்க்க வெளியூர்களிலிருந்து வரும் ரசிகர்கள், தேவையற்ற ஆபத்துகளை தவிர்க்க அரசு பஸ்கள், ரயில்களில் வர வேண்டும்Õ என தெரிவித்துள்ளார்.
Post a Comment