இயக்குநர் சங்க தலைவர் பொறுப்பை சேரனிடம் ஒப்படைத்தார் பாரதிராஜா!

|


சென்னை: திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிராஜா, அமீர் உள்ளிட்ட நிர்வாகிகள் புதன்கிழமை பதவியேற்றனர். ஓய்வு தேவைப்படுவதால் தனது பொறுப்புகளை துணைத் தலைவர் சேரன் மற்றும் சமுத்திரக்கனியிடம் ஒப்படைத்தார் பாரதிராஜா.

கடந்த மாதம் இயக்குநர் சங்கத்துக்கு தேர்தல் நடந்தது. இதில் இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து தலைவராக பாரதிராஜாவும், அமீர் செயலாளராகவும், சேரன், சமுத்திரக்கனி ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பொருளாளராக இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனும் பதவியேற்றுக் கொண்டனர். சென்னையில் நேற்று நடந்த இதற்கான விழாவில் செயற்குழு உறுப்பினர்களும் பதவியேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இயக்குநர் அமீர் கூறியது:

வரவு, செலவை முறைப்படி தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகத்தான், பதவியேற்பு விழாவை உடனடியாக நடத்த முடியவில்லை. பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக நடந்த பொதுக்குழுவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துடன் இயக்குநர் சங்கம் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தம் அதில் முக்கியமானது. அதன்படி, உதவி இயக்குநர்களுக்கு சினிமா சம்பந்தமான பயிற்சி அளிக்க இருக்கிறோம். வருடத்துக்கு 80 மாணவர்கள் இதன் மூலம் பலன் அடைவார்கள்.

சினிமா தொழில்நுட்பங்கள் அடங்கிய அனைத்து விதமான பயிற்சிகளையும் இதில் அளிக்க இருக்கிறார்கள். இயக்குநர் சங்கத்துக்காக ரூ.3000 செலவில் இந்த பயிற்சியை அளிக்க பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது," என்றார்.

பாரதிராஜா பொறுப்புகளை ஒப்படைத்தது குறித்து கூறுகையில், "இயக்குநர் பாரதிராஜா தன் பொறுப்புகளை துணைத் தலைவர்களான சேரன் மற்றும் சமுத்திரகனியிடம் கொடுத்திருக்கிறார். ஓய்வு தேவைப்படுவதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். வேறு எந்தக் காரணமும் இல்லை. தேவைப்படும்போது அவர் நேரில் வந்து வழிநடத்துவார்", என்றார் அமீர்.

தற்போதுள்ள சங்க நிர்வாகிகளுக்கும் பாரதிராஜாவுக்கும் இடையே தேர்தலுக்கு முன் பெரும் மனக்கசப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment