மக்கள் ரசனையை வெல்வதே சிறந்த விருது! - விக்ரம்

|


வெறும் விருதுக்காக நான் நடிப்பதில்லை. அதில் அர்த்தமும் இல்லை. மக்கள் ரசனையை திருப்தி செய்யும் அளவுக்கு நடிக்க வேண்டும் என்பதே என் நோக்கம். அதுதான் சிறந்த விருது, என்றார் நடிகர் விக்ரம்.

விக்ரம் நடித்துள்ள தெய்வத் திருமகள் படம் நல்ல வசூலுடன் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டுள்ளது.

படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக ரசிகர்களைச் சந்திக்க கோவை கேஜி - பிக் சினிமாவுக்கு வந்தார் விக்ரம். அவருடன் படத்தின் இயக்குநர் விஜய்யும் வந்திருந்தார்.

ரசிகர்களைச் சந்தித்த பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த விக்ரம் கூறுகையில், " இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டது. 5 வயது குழந்தை என்னென்ன செய்யும் என்பதை உடன் இருந்து பார்த்து காட்சிகளை உருவாக்கினார் இயக்குநர் விஜய்.

இந்த படத்தில் நடித்த நிலா என்ற சிறுமி நடிப்பில் என்னை தூக்கி சாப்பிட்டு விட்டது.

ஒரு பக்கம் சாமி, தூள் போன்ற படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். மறுபக்கம் தெய்வத் திருமகன் படத்துக்கும் அமோக ஆதரவு தருகிறார்கள். ஆக கொடுக்கிற விதத்தில் கொடுத்தால் மக்கள் ஆதரவு நிச்சயம் உண்டு என்பது நிரூபணமாகியுள்ளது.

வழக்கமாக தெய்வத் திருமகள் போன்ற படங்களை கல்லூரி மாணவர்கள் பார்க்க மாட்டார்கள் என சிலர் கூறினார்கள். ஆனால் இப்படம் வெளியாகி 3 நாட்களாக கல்லூரி மாணவர்கள் தான் அதிகம் பேர் விரும்பிப் பார்ப்பதாக தியேட்டர் ரிபோர்ட் கூறுகிறது.

அடுத்து ராஜபாட்டை என்கிற ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளேன். விருதுக்காக படம் நடிக்கவில்லை. மக்கள் ரசனைதான் சிறந்த விருது," என்றார்.
 

Post a Comment