நித்தியானந்தா ஆபாசப் பட விவகாரம்-சன் டிவி, தினகரன், நக்கீரன் மீது போலீஸில் ரஞ்சிதா புகார்

|


சென்னை: தன்னையும் நித்யானந்தாவும் இணைத்து ஆபாசப்படம் வெளியிட்டதாக சன் டிவி, தினகரன் மற்றும் நக்கீரன் பத்திரிகை மீது சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகை ரஞ்சிதா.

கடந்த வாரம் நித்யானந்தா சாமியாரின் சீடர்கள் சென்னை நகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். அந்த புகார் மனுவில், நித்யானந்தா-நடிகை ரஞ்சிதாவை இணைத்து போலியான ஆபாச படங்களை வெளியிட்ட சன் டி.வி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அந்த புகார் மனு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், அதே குற்றச்சாட்டை கூறி நடிகை ரஞ்சிதாவும் புகார் கொடுத்துள்ளார். நேற்று பிற்பகல் 2.45 மணிக்கு ரஞ்சிதா தனது மூத்த சகோதரியோடும், சீனியர் வக்கீல் ராஜன் உள்பட சில வக்கீல்களோடும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.

கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த அவரிடம் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவின் நகல் காப்பியை தரும்படி நிருபர்கள் கேட்டனர். அதை தர இயலாது என்று ரஞ்சிதா கூறிச் சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கமிஷனர் திரிபாதி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ரஞ்சிதா கொடுத்த புகார் மனு பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து கமிஷனர் திரிபாதி கூறுகையில், "ரஞ்சிதா கொடுத்த புகார் மனுவில், ஆசிரமத்தில் நடந்ததாக போலியான வீடியோ காட்சிகளை வெளியிட்டு என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் என்றும், எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார்கள் என்றும், அதுதொடர்பாக சன் டி.வி. மீதும், நக்கீரன் உள்பட சில பத்திரிகைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோ காட்சிகளை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டினார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு பணம் கேட்டார்கள் என்பதுபற்றி புகாரில் இல்லை. யார், யார் பெயர் உள்ளது என்பது பற்றி மனுவை முழுமையாக படித்து பார்த்தால்தான் தெரியும்.

இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள். பெங்களூரில் நடக்கும் வழக்கு வேறு. இங்கு நடந்த சம்பவங்கள் தொடர்பாக இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கை என்பது பற்றி விசாரணை முடிந்தபிறகுதான் சொல்ல முடியும்.

சக்சேனா மீது நிறைய புகார்கள் இருந்தாலும், இதுவரை 3 புகார்கள் மீதுதான் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.
 

Post a Comment