தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், தூத்துக்குடியில் ஷிப்பிங் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். மார்கழி 16 என்ற படத்தை எடுத்துள்ளார். இவரது மனைவி பிளவர் தூத்துக்குடி மாநகராட்சி 16-வது வார்டு தி.மு.க.கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் ஜெயவிஷால் உமேஷ் ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.
இன்று காலை ஜெயவிஷால் உமேஷை கார் டிரைவர் தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் பள்ளிக்கு அழைத்து சென்றார். சிறிது நேரம் கழித்து , ராஜ்குமார் வீட்டிற்கு ஒரு போன் வந்தது.
எதிர்முனையில் பேசிய நபர், ஜெயவிஷால் உமேசையும், டிரைவர் பாலகிருஷ்ணனையும் காருடன் கடத்தி வைத்துள்ளோம். அவர்களை விடுவிக்க ரூ.5 கோடி பணம் தர வேண்டும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் பிளவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயவிஷால் உமேசை கடத்தி சென்றவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சினிமா படம் தயாரித்தது தொடர்பாக ராஜ்குமாருக்கும், சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கடத்தலுக்கு இவர்கள்தான் காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
டிரைவர் மீதும் போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். ராஜ்குமாரும் அவர் மனைவியும் திமுகவினர் என்பதால், அரசியல் ரீதியான பழிவாங்கல் ஏதேனும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கார் கிடைத்தது
இதற்கிடையே, திருச்செந்தூர் செல்லும் சாலையில் டிரைவரும் உமேஷும் சென்ற கார் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment