சிறுநீரகக் கோளாறு... இயக்குநர் டி.கே.போஸ் மரணம்!

|


சென்னை: சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்ட பிரபல இயக்குநர் டி கே போஸ் நேற்று மரணமடைந்தார்.

திருக்கல்யாணம், சின்னஞ்சிறு கிளியே, என்னை விட்டுப்போகாதே, ராசாவே உன்னை நம்பி, கவிதை பாடும் அலைகள், சமீபத்தில் வெளியான கொடைக்கானல் உள்பட பல படங்களை இயக்கியவர் டி.கே.போஸ். இவர், கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், நேற்று பகல் 11 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் சென்னை விருகம்பாக்கம் ரத்னா நகரில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் டைரக்டர் பாரதிராஜா, இணைச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் டி.கே.போஸ் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

மரணம் அடைந்த டி.கே.போசுக்கு வயது 66. அவருடைய சொந்த ஊர், சிவகங்கை மாவட்டம் சிராவயல். அவருக்கு பத்மா என்ற மனைவியும், தேன்மொழி என்ற வளர்ப்பு மகளும் இருக்கிறார்கள்.

டி.கே.போசின் உடல் தகனம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மயானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

 

Post a Comment