சூப்பர் ஸ்டாராக ஆசையில்லை; அவரைப் பார்க்கத்தான் ஆசை! - 'முதல் இடம்' விதார்த்

|


எனக்கு சூப்பர் ஸ்டாராகும் ஆசை எதுவும் இல்லை. ஆனால் ஒரு ரசிகனாக சூப்பர் ஸ்டாரைப் பார்க்கும் ஆசை மட்டும்தான் உள்ளது என்றார் நடிகர் விதார்த்.

வளரும் நடிகர்களில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்திருப்பவர் விதார்த். தொட்டுப்பார் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, மைனா மூலம் முன்னணி நடிகர் வரிசையில் இடம்பிடித்தவர் விதார்த்.

இப்போது பாரம்பரியம் மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் 175வது படமான முதல் இடத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் வெளியானது.

நல்ல பொழுதுபோக்குப் படம் என 'முதல் இடம்' குறித்து சாதகமான தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ள நிலையில், ஏவிஎம் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து செய்தியாளர்களுடன் விதார்த் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பெரு துளசி பழனிவேல் வரவேற்றார்.

பின்னர் விதார்த் பேசுகையில், "என் தாத்தா சினிமாவில் நடிகராக விரும்பி சென்னை வந்தார். இதே ஏவி எம் நிறுவனத்தில் பராசக்தி, ஓர் இரவு போன்ற படங்களில் துண்டு வேடங்களில் நடித்தார். ஆனால் ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை. எனவே மீண்டும் ஊருக்கே திரும்பிவிட்டார்.

அவர்தான் என்னை நடிகனாக்கிப் பார்க்க விரும்பி, என்னை சென்னைக்கு அனுப்பியவர். ஏவிஎம்முக்கு எதிரில் உள்ள சந்தில்தான் தங்கியிருந்தேன். கார்ப்பெண்டர்களுடன் அவ்வப்போது ஏவிஎம்முக்கு வந்து போவேன். இன்று அதே ஏவிஎம் நிறுவனத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை எண்ணும்போது பெருமையாக உள்ளது.

முதல் இடம் படம் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படம் பார்த்து நிறைய பேர் எனக்கு போன் செய்து பாராட்டி வருகிறார்கள்," என்றார்.

முதல் இடம் என்று பெயர் வைத்துள்ளீர்களே, அப்படியானால் சூப்பர் ஸ்டாராகும் ஆசை உள்ளதா என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

உடனே பதறிப் போன விதார்த், "சூப்பர் ஸ்டாராகும் ஆசையெல்லாம் எனக்கு இல்லை. ஒரு ரசிகனாக சூப்பர் ஸ்டாரை போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே உள்ளது," என்றார்.

அடுத்து, கொள்ளைக்காரன், பாலுமகேந்திரா உதவியாளர் இயக்கும் படம், பாலா உதவியாளர் இயக்கும் ஒரு படம் மற்றும் ஒரு மெகா பட்ஜெட் மலையாளப் படம் மற்றும் தமிழ் - தெலுங்கு இருமொழிப்படம் ஒன்று என பெரிய 'லைன் அப்' வைத்திருக்கிறார் விதார்த்.
 

Post a Comment