சம்பந்தமே இல்லாமல் என்மீது புகாரா? - நடிகர் ஆர்கே மறுப்பு

|


சென்னை: வேலைக்கு தேர்வு செய்த நபரை விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாமல் என்மீது சில இளைஞர்கள் புகார் செய்துள்ளனர், என்று நடிகர் ஆர்கே தெரிவித்தார்.

‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் இவன்’ போன்ற படங்களில் நடித்தவர் ஆர்.கே. பி வாசு இயக்கத்தில் இவர் நடித்துள்ள, ‘புலி வேசம்’ என்ற படம் விரைவில் வெளிவர உள்ளது. அதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளார்.

இந்த நிலையில் இவர்மீது நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் சில இளைஞர்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

சென்னை தியாகராயநகரில் ‘இன்டர்நேஷனல் பிஸ்னஸ் டெவலப்மெண்ட் கார்ப்ரேஷன்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் உள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் ஆர்.கே.வும், தலைமை நிர்வாக அதிகாரியாக விஜயகுமார் என்பவரும் செயல்பட்டதாகவும் கூறிய அவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தற்கான சம்பளத்தை தரவில்லை என்றும் கூறினர்.

இந்த மனு மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்.கே. மறுப்பு

இந்த புகார் தொடர்பாக நடிகர் ஆர்.கே.விடம், நிருபர்கள் கேட்டபோது, அந்த புகார் தவறானது என்றும், அவர்களை வேலைக்கு எடுத்தது விஜயகுமார் என்றும், அவர்தான் அதற்கு பொறுப்பாளி என்றும், தனக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்தார்.

“யார் பெயரை சொன்னால் உடனடி கவனம் பெறுமோ அவர் பெயரை பிரயோகப்படுத்தும் டெக்னிக் இது. போலீசார் தாராளமாக விசாரிக்கலாம். எந்த வகையில் இதில் சம்பந்தப்படாத என்பெயரை எதற்காக இழுக்க வேண்டும்?”, என்றார் அவர்.

 

Post a Comment