தேர்தல் முடிவு பற்றி கருத்து சொன்னதற்காக குஷ்பு மீது அதிமுக வக்கீல் வழக்கு!

|


சேலம்: சட்டசபைத் தேர்தல் முடிவு பற்றி கருத்து சொன்ன நடிகை குஷ்பு மீது அதிமுக வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதும், கருணாநிதியைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்த நடிகை குஷ்பு, இது தி.மு.கவிற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. பொதுமக்களுக்கு ஏற்பட்ட தோல்வி என்று கூறி இருந்தார். இது தொடர்பாக குஷ்பு மீது வழக்கு தொடர சேலம் அ.தி.மு.க. வக்கீல் வி.அறிவழகன் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பி உள்ள மனுவில், "சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகள் 202 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆனால் நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் பொது மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி தமிழக மக்கள் 5 வருடங்களுக்கு கஷ்டப்பட போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கருத்து கூறுவது மனிதனுக்கு சுதந்திரம் ஆனால் அந்த சுதந்திரத்தை பயன் படுத்தி எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற கருத்தில் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளார். அவரது வார்த்தையில் ஏதோ அர்த்தம் உள்ளது. ஆட்சியில் அமரும் முன்பே மக்கள் 5 வருடம் கஷ்டப்பட போகிறார்கள் என்று கூறுவது தவறு. இது வாக்களித்த மக்களை வேதனைப்படுத்துவது போல் உள்ளது.

நடிகை குஷ்பு பல கோடி தமிழக வாக்காளர்களின் மனதை புண்படுத்தி பேசி உள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் குஷ்புவின் மீது கோர்ட்டில் வழக்கு தொடரவும் உள்ளேன்," என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே தனது துணிச்சலான கருத்துக்களுக்காக பல வழக்குகளைச் சந்தித்தவர் குஷ்பு. இந்த நிலையில் இந்த புதிய வழக்கு குறித்து அவரிடம் கேட்டபோது, நான் மக்களை திட்டவில்லை. தவறாக எதுவும் கூறவில்லை. அவர்களின் முடிவு குறித்த எனது கருத்து இது. இதில் மக்களை அவமானப்படுத்துவது எங்கே வந்தது. மற்றபடி வழக்கு குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை," என்றார்.
 

Post a Comment