நடிகை காந்திமதி மரணம்
9/10/2011 11:12:00 AM
9/10/2011 11:12:00 AM
சென்னை, : பழம்பெரும் நடிகை காந்திமதி நேற்று காலமானார். அவருக்கு வயது 65. மானாமதுரையை சேர்ந்தவர் காந்திமதி. பள்ளி பருவத்திலேயே நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். பிறகு சென்னை வந்த காந்திமதி, 'சேவா ஸ்டேஜ்' என்ற நாடக குழுவில் நடித்துவந்தார். 1965&ம் ஆண்டு 'இரவும் பகலும்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பிறகு ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்' என்ற படத்தில் நாயகியாக நடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த அவர், '16 வயதினிலே' படத்தின் 'குருவம்மா' கேரக்டரால் பிரபலமானார். சுருளிராஜனுடன் நடித்த 'மாந்தோப்பு கிளியே' மூலம் காமெடி நடிகையானார். காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கடந்த 3 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை மரணம் அடைந்தார்.
அவரது உடல் சென்னை வடபழனியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். மாலையில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஏவி.எம் பின்புறம் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த காந்திமதி தனது உறவினர் மகன்கள் பாலசுப்ரமணியன், தீனதயாளன் ஆகியோரை தத்தெடுத்து வளர்த்தார். அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
தமிழக அரசின் கலைமாமணி, நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருதுகளை பெற்றுள்ள காந்திமதிக்கு தமிழ்நாட்டின் பிற பகுதியில் உள்ள பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது. 2004ம் ஆண்டு 'ஒருமுறை சொல்லிவிடு' என்ற படத்துக்காக சிறந்த காமெடி நடிகை விருதையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்கம் இரங்கல்: நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காந்திமதியின் மறைவு தமிழ் திரையுலகுக்கு, ரசிகர்களுக்கு மாபெரும் இழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கு நடிகர் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.
Post a Comment