9/12/2011 10:00:29 AM
நந்தா நடித்த 'வந்தான் வென்றான்', 'வேலூர் மாவட்டம்' படங்கள் இம்மாதம் ரிலீசாக உள்ளன. இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நான் நடிக்க வந்து 10 வருடங்களாகி விட்டது. இன்னும் 15 படங்கள் கூட முடிக்கவில்லை. ஒரே மாதத்தில் எனது இரு படங்கள் ரிலீசாவது மகிழ்ச்சி அளிக்கிறது. 'வந்தான் வென்றான்' படத்தில், இதுவரை நான் ஏற்று நடிக்காத கேரக்டர். வில்லன் என்கிறார்கள். படம் பார்த்தால், அப்படி தெரியாது. ஜீவா, நான், டாப்ஸி மூவரும், நாங்கள் நினைப்பதே சரி என்று செயல்படுவோம். நாங்கள் எங்கே, எப்படி, ஏன் சந்திக்கிறோம் என்பது விறுவிறுப்பான திரைக்கதை. ஜீவா கதைக்கு அதிக முக்கியத்துவம் தருவார். இப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்க என்னை அனுமதித்தது, அவருடைய பெருந்தன்மை. 'வேலூர் மாவட்டம்' படத்தில் போலீஸ் ஆபீசராக நடிக்கிறேன். எனக்கு ஜோடி பூர்ணா. அரசியல்வாதியுடன் மோதும் நான், கடைசிவரை துப்பாக்கி எடுக்க மாட்டேன். படம் யதார்த்தமாக இருக்கும். ஐதராபாத் போலீஸ் அகாடமியில், 35 நாட்கள் விசேஷ பயிற்சி பெற்ற பிறகு இப்படத்தில் நடித்தேன். முதல்முறையாக டெல்லி போலீஸ் அகாடமியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. கண்டிப்பாக இவ்விரு படங்களும் திருப்புமுனையாக அமையும். அடுத்து 'திருப்பங்கள்' படத்தில் நடிக்கிறேன். என் திருமணம் விரைவில் நடக்கும். பெண் பார்க்கும் பொறுப்பை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டேன்.
Post a Comment