9/12/2011 10:02:11 AM
சினிமாவில் எனக்கு உதவ யாருமில்லை என்று பிரசன்னா வேதனையுடன் குறிப்பிட்டார். யுடிவி தயாரிக்கும் படம் 'முரண்'. சேரன், பிரசன்னா, ஹரிப்பிரியா, நிகிதா நடித்துள்ளனர். மிஷ்கின் உதவியாளர் ராஜன் மாதவ் இயக்கி உள்ளார். இம்மாத இறுதியில் படம் வெளிவருகிறது. படம் பற்றி பிரசன்னா பேசியதாவது: சினிமா உலகில் எனக்கு யாருடைய உதவியும் இல்லை. என் முயற்சியால் பல படம் நடித்திருக்கிறேன். சில தப்பான படங்களிலும் நடித்திருக்கிறேன். நல்ல படங்களுக்கு பாராட்டவும், தவறான படங்களிலிருந்து வழிநடத்தவும் எனக்கு யாருமில்லை. அறிமுகப்படுத்திய சுசி கணேசன், பிரகாஷ்ராஜ், இன்னொரு அடையாளம் தந்த மிஷ்கின் இப்படிச் சிலர் இருந்தாலும் முழுமையான ஆதரவு எனக்கு இல்லை. 'பிரசன்னாவா அவர் வேண்டாமே' என்று சொல்ல, ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை பல தயாரிப்பாளர்கள் நிராகரித்ததற்கு காரணம், நான் நடிக்கிறேன் என்பதால்தான். இப்போது தயாரித்துள்ள தயாரிப்பாளர் கூட, மாற்று ஏற்பாடு செய்யலாமே என்றுதான் சொன்னார். ஆனால் இயக்குனர்தான் பிடிவாதமாக நடிக்க வைத்தார். இது என் சினிமா வாழ்க்கையை தீர்மானிக்கப்போகும் படம் என்பதால் இரண்டு வருடங்கள் வேறெந்த படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் நடித்துள்ளேன். யாரெல்லாம் பிரசன்னா வேண்டாம் என்று சொன்னார்களோ அவர்களெல்லாம் பிரசன்னாவை தவிர வேறு யாரும் இந்த கேரக்டருக்கு பொருந்தியிருக்க மாட்டார்கள் என்று சொல்ல வேண்டும். அதுதான் என் ஆசை. அதற்காகத்தான் கடுமையாக உழைத்திருக்கிறேன். இவ்வாறு பிரசன்னா கூறினார். நிகழ்ச்சியில் சேரன், இயக்குனர் ராஜன் மாதவ், இசை அமைப்பாளர் சாஜன் மாதவ், ஒளிப்பதிவாளர் பத்மேஷ், நடிகை ஹரிப்ரியா, தயாரிப்பாளர் தனஞ்செயன் கலந்து கொண்டனர்.
Post a Comment