எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் சதாபிஷேக விழா

|


சென்னை: 1000 படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதிய ஆரூர்தாசின் சதாபிஷேகம் நேற்று சென்னையில் நடந்தது.

1000 படங்களுக்கு மேல் கதை-வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். அவரது சதாபிஷேக விழா மைலாப்பூர் நியூ உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது.

இந்த விழாவுக்கு தொழில் அதிபர் நல்லிகுப்புசாமி செட்டியார் தலைமை தாங்கினார். அவர் ஆருர்தாஸுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கினார். சதாபிஷேக விழாவுக்கு எம்.ஜி.ஆர்.கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் முன்னிலை வகித்தார். ஏவி.எம்.சரவணன், கவிஞர் வாலி, சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் ஆகியோர் ஆரூர்தாஸை வாழ்த்தி பேசினார்கள்.

இந்த விழாவில் ஆருர்தாஸும், அவரது மனைவி லூர்து மேரியும் மாலை மாற்றிக் கொண்டனர். நண்பர்களும், உறவினர்களும் அவருக்கு பொன்னாடை போர்த்தினர்.

இந்த விழாவில் பேசிய ஆர். எம். வீரப்பன் கூறியதாவது,

திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியவர்களுக்கு ஒரு சமயத்தில் வசனம் எழுதிய பெருமை ஆரூர்தாஸுக்கு உண்டு. அவர்களுக்கு வசனம் எழுதுவது அவ்வளவு எளிதன்று.

வளர்ந்து வரும் இளம் நடிகர், நடிகைகள் ஆருர்தாஸை முன்மாதிரியாகக் கொண்டு நடக்க வேண்டும். எளிமையாக வாழும் ஆரூர்தாஸை என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். மேலும் இவ்வுலகில் வாழ்ந்து மக்களுக்கும், சமுதாயத்திற்கும் வழிகாட்ட வேண்டும் என்றார்.

விழாவில் பாடகர் எம்.எஸ்.விசுவநாதன், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், நடிகை எம்.என். ராஜம், நடிகர் நாசர் உள்ளிட்ட பல திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர்.
 

Post a Comment