இளைஞர் காங். தலைவர் பதவிக்கு 'குத்து' ரம்யா குறி!

|


நடிகை ரம்யா கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் பதவி்ககு குறிவைத்துள்ளார். இந்நிலையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகை ரம்யா கடந்த ஏப்ரல் மாதம் தான் இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார். இந்நிலையில் அவர் கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை நேற்று சாந்திநகரில் உள்ள பூத் 3-ல் தாக்கல் செய்தார்.

வரும் அக்டோபர் மாதம் 8 மற்றும் 9 தேதிகளில் கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இதிலும் அவர் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து அவர் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

நான் பூத் அளவில் தேர்வானதும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன். இதன் மூலம் நான் மக்களுக்கு சேவை செய்வேன். என்னால் முடிந்த வரை நான் பிரச்சனைகளை முன்வைத்து நல்ல தீர்வு கிடைக்கச் செய்வேன். நான் சுயநலவாதியன்று. உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறேன். ஒருவருக்கு உண்மையிலேயே நாட்டு நலனில் அக்கறை இருந்தால் பிரச்சனைகளைத் தீர்க்க பாடுபட வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை அப்படியே விட்டுவிட நான் விரும்பவில்லை.

அதே சமயம் நான் நடிப்பதை நிறுத்த மாட்டேன். இது வேறு, அது வேறு என்றார்.

தலைவர் பதவிக்கு ரம்யாவை எதிர்த்து அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே நிற்கிறார். ரம்யாவுக்கும் அரசியல் பின்னணி இருப்பது அவருக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது. அவரது தாத்தா தான் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment