நடிகர் சங்கக் கூட்டம்: வருவாரா சூப்பர் ஸ்டார்?

|


நடிகர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்களாக இருந்தாலும் இன்றைய முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் 'அந்த அரசியலில்' ஆர்வம் காட்டுவதில்லை.

குறிப்பாக ரஜினி, கமல் போன்றோர் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கி இருந்தனர். ஆனால் ரஜினி மட்டும் சில ஆண்டுகளாக நடிகர் சங்கத்தின் கூட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வந்தார்.

நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதம், போராட்டம், கண்டனக் கூட்டம், நிதி திரட்டும் நிகழ்ச்சி, கலை விழா அனைத்திலும் ரஜினி தவறாமல் கலந்து கொண்டார்.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய், அவர் குணமாகி வந்த பிறகு நடிகர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் நாளை நடக்கிறது. அதேபோல தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படுவதால் முதல் தடவையாக சங்க வளாகத்துக்கு வெளியே காமராஜர் அரங்கில் இப்பொதுக்குழு கூடுகிறது.

இந்த கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு ரஜினிக்கு அழைப்பு அனுப்பியுள்ளனர் நிர்வாகிகள்.

இப்பொதுக்குழுவில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பெப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே சம்பள பிரச்சினையில் மோதல் போக்கு உருவாகி உள்ளது. இதனால் புதுப்படங்களுக்கு பூஜை போட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை நடிகர், நடிகைகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. புதுப்படங்களில் நடிக்க முடியாமல் பலர் வீட்டில் இருக்கின்றனர். இப்பிரச்சினை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.

எனவே ரஜினி, கமல் ஆகிய இருபெரும் கலைஞர்களும் நிச்சயம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

தற்போது ஓய்வெடுத்து வரும் ரஜினி, கடந்த 5 மாதங்களாக எந்த வெளி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இப்போது நடிகர் சங்கக் கூட்டத்துக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

Post a Comment