ஓட்டல் அதிபருடன் காதல் திருமணம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரீமாசென்!

|


நடிகை ரீமாசென், டெல்லியை சேர்ந்த ஓட்டல் அதிபரை காதல் திருமணம் செய்கிறார். இவர்கள் திருமணம் 2012-ல் நடக்கிறது. இதனை ரீமா சென்னே அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார்.

'மின்னலே' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், ரீமாசென். செல்லமே, பகவதி, தூள், கிரி, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவருக்கும், டெல்லியில் ஓட்டல் நடத்தி வரும் ஷிவ்கரன்சிங் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இருவரும் கடந்த 2 வருடங்களாக சேர்ந்து சுற்றி வருகிறார்கள். நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் விருந்துகளுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள். ஷிவ்கரன் சிங்கை தனது நண்பர் என்று ரீமாசென் மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வந்தார்.

இதுகுறித்து இரு ஆண்டுகளுக்கு முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் அப்போது மறுத்து வந்த ரீமா, இப்போது தனது காதலை பகிரங்கமாக அறிவித்துள்ளார்

அவர் கூறுகையில், "நானும், ஷிவ்கரன்சிங்கும் முதலில் நண்பர்களாகத்தான் பழகி வந்தோம். நாளடைவில் எங்கள் நட்பு, காதலாக மாறிவிட்டது. என்னை அவரும், அவரை நானும் மிக நன்றாக புரிந்து கொண்டோம்.

அழகான ஒரு பஞ்சாபி இளைஞனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். என் ஆசை நிறைவேறி இருக்கிறது. ஷிவ்கரன் சின் கிடைத்தது, என் அதிர்ஷ்டம்.

பெற்றோர் சம்மதத்துடன்...

எங்கள் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதைத்தொடர்ந்து நானும், ஷிவ்கரன்சிங்கும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறோம். எங்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதமும் கிடைத்து விட்டது.

அடுத்த வருடம் ஆரம்பத்தில் எங்கள் திருமணம் நடைபெறும். திருமணத்துக்குப்பின் நடிப்பேனா, மாட்டேனா என்பதை முடிவு செய்யவில்லை. ஆனால், என் கணவருடன் டெல்லியில் குடியேறி விடுவேன். டெல்லி, எனக்கு மிகவும் பிடித்த நகரம்,'' என்றார்.
 

Post a Comment