ஆலப்புழையில் விபத்து-மம்முட்டி கார் மீது பஸ் மோதியது-தப்பினார் மம்முட்டி

|


ஆலப்புழை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி பயணம் செய்த காரின் பின்புறம் வேகமாக வந்த தனியார்ப் பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் காரின் பின்பகுதி நொறுங்கிப் போனது. அதிர்ஷ்டவசமாக மம்முட்டி உயிர் தப்பினார். மம்முட்டியிடம் கார் டிரைவர் மன்னிப்பு கேட்டதால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் விட்டு விட்டனர்.

வெனிஸில் வியாபாரி என்ற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி. இப்படத்தின் ஷூட்டிங் ஆலப்புழையில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு விட்டு தனது வீட்டுக்குக் கிளம்பினார் மம்முட்டி. எர்ணாகுளத்தில் அவரது கார் போய்க் கொண்டிருந்தபோது அரூர் கோவில் சந்திப்புப் பகுதியில் கார் மீது பின்னால் வந்த தனியார்ப் பேருந்து பலத்த சப்தத்துடன் மோதியது.

இதில் காரின் பின்பகுதி நொறுங்கிப் போனது. இதைப் பார்த்த பொதுமக்கள் வேகமாக காரை நோக்கி ஓடி வந்தனர். உள்ளே பார்த்தபோது அங்கு மம்முட்டி சிக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்து அதிர்ந்தனர். உடனடியாக மம்முட்டியை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக மம்முட்டிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

பின்னர் விரைந்து வந்த போலீஸார் பஸ்சை காவல் நிலையம் கொண்டு சென்றனர். இந்த நிலையில் நடிகர் மம்முட்டியைச் சந்தித்த பஸ் டிரைவர் விபத்து ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவரை மன்னிப்பதாக மம்முட்டியும் கூறி போலீஸாரிடம் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. எச்சரித்து டிரைவரை அனுப்பி விட்டனர்.
 

Post a Comment