தீபாவளிக்கு 5 ஷோ- தியேட்டர்களுக்கு அனுமதி- கட்டணக் கொள்ளை தடுக்கப்படுமா?

|


தீபாவளிப் பண்டிகையின்போது தியேட்டர்களில் 5 காட்சிகள் வரை காட்ட தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஆனால் புதுப் படங்களைத் திரையிடும் தியேட்டர்களில் மிகப் பெரிய அளவில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எந்தப் புதிய படம் வந்தாலும் சரி, குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தால் போதும், தியேட்டர்களில் கட்டணக் கொள்ளை கொடி கட்டிப் பறக்கும். சாதாரண நாட்களிலும் கூட தியேட்டர்களுக்கு சாமானிய மக்கள் குடும்பத்தோடு போய் பார்க்க முடியாத நிலை உள்ளது (படங்கள் மட்டுமல்ல, தியேட்டர் கட்டணமும் அவ்வளவு லட்சணத்தில் உள்ளது). இதனால்தான் திருட்டு டிவிடி உள்ளிட்டவை பெருத்துப் போயுள்ளன.

தியேட்டர்களில் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியையும் செய்து தராமல் கட்டணத்தை மட்டும் தாறுமாறாக உயர்த்திக் கொள்ளையடிக்கும் தியேட்டர்கள் நிறையவே உள்ளன. திண்பண்டம் எடுத்து வரக் கூடாது என்று மக்களிடம் கூறும் தியேட்டர்கள் உள்ளே விற்பதைத்தான் திண்ண வேண்டும் என்று மக்கள் கழுத்தில் கத்தியை வைக்காத குறையாக கூறுகின்றன. உள்ளே விற்கும் திண்பண்டங்களோ, ராக்கெட் விலையை தாங்கி மக்களை பதைபதைக்கவும், வயிறு எறியவும் செய்கின்றன.

இந்த நிலையில் தீபாவளி வந்து விட்டது. கட்டணக் கொள்ளையும் தொடங்கப் போகிறது. இந்தப் பின்னணியில் தீபாவளிக்கு ஐந்து காட்சிகள் வரை நடத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் பொதுமக்களுக்கு தொன்றுதொட்டு வரும் பல பழக்கவழக்கங்களில் ஒன்று, தீபாவளியன்று ஒரு சினிமாவை பார்த்து மகிழ வேண்டும் என்பது. அப்படி விரும்புபவர்கள் எளிதாக சினிமா பார்ப்பதற்காக கூடுதல் காலை காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.

அந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா, தீபாவளி பண்டிகை முதல் 7 நாட்களுக்கு (26-ந் தேதி முதல் 1-11-2011 வரை) அனைத்து திரையரங்குகளிலும் கூடுதல் காலை காட்சி நடத்த அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அதற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதேபோல தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஒரு அறிக்கை விடுத்துள்ளனர். அதில்,

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகள் 5 காட்சிகள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது வருகிற 27, 28, 31 மற்றும் 1-11-2011 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

26, 29, 30 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறையானதால், அந்த நாட்களிலும் அதிகப்படியாக ஒரு காட்சி, அதாவது 5 காட்சிகள் நடத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

அப்படியே மக்களைப் பாதிக்காத வகையில் கட்டணங்களை குறைவாக வசூலிக்கவும் அரசு கண்டிப்பான நடவடிக்கை எடுத்தால் மக்கள் முழு சந்தோஷத்தோடு தியேட்டர்களுக்குப் படையெடுத்து வருவார்கள்.
 

Post a Comment