ராம.நாராயணன் மீது போலீஸில் பண மோசடிப் புகார் எதிரொலி- கைதாவாரா?

|


சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 3 திரைப்படத் தயாரிப்பாளர்கள், முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் மீது பண மோசடிப் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து ராம.நாராயணன் கைதாவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து குட்வில் மூவீஸ் உரிமையாளர் கே.வி.குணசேகரன், எம்.ஆர்.மூவீஸ் நிறுவன உரிமையாளர் ராஜசிம்மன், பாலவிக்னேஷ் கிரியேஷன்ஸ் உரிமையாளர் ஜி.பாபுகணேஷ் ஆகியோர் கொடுத்துள்ள புகாரில்,

சினிமா துறையில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமாக வீட்டுமனை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அப்போதைய தலைவர் ராம.நாராயணன் அளித்திருந்தார்.

இதற்கான சந்தாவாக ரூ.2,500 தொகையை வழங்கினோம். சங்க உறுப்பினர்களிடமும் இந்தத் தொகை வசூலிக்கப்பட்டது. ஆனால் அதற்கான ரசீதை யாருக்கும் அவர் வழங்கவில்லை. இந்த திட்டம் எந்த அளவுக்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்று கேட்டதற்கு ராம.நாராயணன் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில் பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சியை சங்கத்தின் சார்பில் அவர் நடத்தினார். இந்த நிகழ்ச்சியை வெளியிடுவதற்கான உரிமையை சங்கத்தை கலந்தாலோசிக்காமல் தனியார் டி.வி. ஒன்றுக்கு ராம.நாராயணன் கொடுத்துள்ளார்.

இதுபோன்ற பல நிகழ்வுகளில் அதிக அளவில் பணம் கையாடல் செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவர் ராஜினாமா செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார்.

எனவே ராம.நாராயணன் மற்றும் சங்க ஊழியர்கள் ரபி, குரு, மூர்த்தி ஆகியோரை பிடித்து, ஆவணங்களை கைப்பற்றினால் பல மோசடி விவரங்கள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராமநாராயணன் உள்ளிட்டோரைப் பிடித்து கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Post a Comment