மனைவியை அடித்த வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்

|


மனைவியை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறி கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.

மனைவி விஜயலட்சுமியை விட்டுப் பிரிந்து வசித்து வருகிறார் தர்ஷன். அவருக்கும் நடிகை நிகிதாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், இதனால்தான் தர்ஷனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னை அடி்த்து கொலை செய்து விடுவதாக தர்ஷன் மீது போலீஸில் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. இதையடுத்து போலீஸார் தர்ஷனைக் கைது செய்தனர். இந்த சூழ்நிலையில் இவர்களது குடும்பச் சண்டையில் தலையிட்ட கன்னட தயாரிப்பாளர் சங்கம், நிகிதாவுக்குத் தடை விதித்து பரபரப்பை அதிகரித்தது. ஆனால் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழவே தயாரிப்பாளர் சங்கம் தடையை விலக்கியது.

இந்தப் பின்னணியில் தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டார். அங்குஅவருக்கு நெஞ்சு வலிப்பதாக கூறவே மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு செஷன்ஸ் கோர்ட் ஜாமீன் வழங்க மறுத்தது. இந்த நிலையில், விஜயலட்சுமி திடீரென பல்டி அடித்தார்.

செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜரான அவர் தனது கணவர் தாக்கி தான் காயமடையவில்லை என்றும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காயமடைந்ததாகவும் அவர் கூறினார். மேலும் தர்ஷன் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறினார். இருப்பினும் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

தர்ஷன் மீது கொலை முயற்சி வழக்கு, தாக்கி காயம் ஏற்படுத்துதல், மனைவியைக் கொடுமைப்படுத்தியது, குற்றச் செயலில் ஈடுபடுதல் ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டதால் இந்த நிலை. மேலும் அவர் மீது ஆயுதத் தடைச் சட்டமும் பாய்ந்திருந்ததால் ஜாமீன் கிடைக்க முடியாத நிலை நிலவியது.

இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தர்ஷன் ஜாமீன் கோரி மனு செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. மேலும் அக்டோபர் 13ம் தேதி தர்ஷனும், அவரது மனைவி விஜயலட்சுமியும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
 

Post a Comment