தமிழ் சினிமாக்காரர்களுக்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் வழிகாட்ட வேண்டும்! - கலைப்புலி தாணு

|


தமிழ் சினிமாவிலிருந்து பாலிவுட் போய் படம் தயாரிக்க ஆசைப்படுபவர்களுக்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் நல்ல வழி காட்ட வேண்டும், என்றார் கலைப்புலி தாணு.

கபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில், இந்திப் பட இயக்குநர் டினு வர்மா இயக்கியுள்ள புதிய படம் காட்டுப் புலி. தமிழ் மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகிறது.

தயாரிப்பாளர் சங்கப் பொருளாளரும் முன்னணி தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு இந்தப் படத்தை தமிழில் வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

அர்ஜுன், சாயாலி பகத் மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படம், ஒரு ஆக்ஷன் த்ரில்லர். ஒரு காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் டாக்டர் தம்பதியும் மூன்று இளம் ஜோடிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைதான் இந்தப் படத்தின் கதை.

டினு வர்மா பல பிரமாண்ட இந்திப் படங்கள் மற்றும் முன்னணி நடிகர்களுடன் ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றியவர். அவரது முதல் தமிழ்ப் படம் இது.

காட்டுப்புலியின் இசை வெளியீட்டு விழா சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது. விழாவில் அர்ஜூன், சாயாலி பகத், இயக்குநர் எஸ்ஜே சூர்யா, தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன், படத்தின் வசனம் பாடல்களை எழுதிய ஏஆர்பி ஜெயராம் உள்பட பலரும் பங்கேற்றனர்.

விழாவில் இசை குறுந்தகடை வெளியிட்டுப் பேசிய கலைப்புலி தாணு, "இந்தப் படம் மிகச் சிறந்த ஆக்ஷன் த்ரில்லராக வந்துள்ளது. படத்தைப் பார்த்து மிகவும் ஈர்ப்பாகி, அதை வெளியிடும் பொறுப்பை ஏற்றேன்.

படம் மிகச் சிறப்பாக ஓடும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. நம்மை நம்பி தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கும் டினு வர்மா, நல்ல லாபத்துடன்தான் மும்பை திரும்ப வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனவே இந்தப் படத்தின் லாபம் அவருக்கே சேரட்டும். ஆனால் நஷ்டமடைய விடமாட்டேன்.

நான் தயாரித்த 25 படங்களின் உரிமையையும் சமீபத்தில் பாலிவுட்டின் ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கேட்டது. நான் உடனே அனைத்தையும் கொடுத்துவிட்டேன். அதற்காக ஒரு பெரும் தொகையை எனக்கு அந்த நிறுவனம் காசோலையாகக் கொடுத்தது. ஆனால் நான் அதை வாங்கவில்லை.

பதிலுக்கு ஒரு கோரிக்கையை மட்டும் வைத்தேன். தமிழிலிருந்து பலர் பாலிவுட்டுக்குப் போய் படம் எடுக்க விரும்புகின்றனர். அப்படி வருபவர்களுக்கு நல்ல வழியை காட்ட வேண்டும், சரியாக வழிநடத்த வேண்டும். வேறு ஒன்றும் வேண்டாம் என்று கூறினேன். அவர்களும் மகிழ்ச்சியுடன் சம்மதித்ததனர்.

இந்தப் படத்தின் நாயகன் அர்ஜுன் எனது சகோதரர். அவ்ர குடும்பத்தில் நானும் ஒருவன். அவரது இந்தப் படம் மிகச் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார்.

விழாவில் பேசிய அர்ஜூன், "கலைப்புலி தாணுதான் எனக்கு ஆக்ஷன் கிங் பட்டத்தைக் கொடுத்தார். அவர் படத்தில் என்றைக்கும் நடிக்க நான் தயார்.

இன்றைக்கு படம் பண்ணுவது பெரிதல்ல. அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே பெரிது. அதை உணர்ந்து, அதற்கு தகுதியான கலைப்புலி தாணுவிடம் இந்தப் படத்தை ஒப்படைத்திருக்கலாம். இந்தப் படத்தின் வெற்றிக்கு இது ஒன்றே போதும்," என்றார்.
 

Post a Comment