மனைவியை துன்புறுத்தியதாக இன்னொரு கன்னட நடிகர் மீது புகார்

|


மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக இன்னொரு கன்னட நடிகர் மீது புகார் எழுந்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்புதான் கன்னட நடிகர் தர்ஷனுக்கும், அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது தனது மனைவியை அடித்துக் காயப்படுத்தியதாக தர்ஷன் மீது விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார். மேலும் நடிகை நிகிதாவுக்கும், தர்ஷனுக்கும் இடையே இருந்த நட்பு காரணமாகவே இந்த மோதல் மூண்டதாகவும் கூறப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட தர்ஷன் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் இன்னொரு கன்னட நடிகரான பிரஷாந்த் என்பவர் சிக்கலில் மாட்டியுள்ளார். இவர் தன்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவரது மனைவி சசிரேகா மாநில மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஆண்டுதான் இக்குழந்தை பிறந்தது.

ஒரட்டா ஐ லவ் யூ உள்ளிட் சில படங்களில் நடித்துள்ளார் பிரஷாந்த். இவர் அவ்வளவு பிரபலமில்லாத நடிகர் ஆவார். படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால் அதில் நஷ்டமே ஏற்பட்டது. இதனால் மனைவியிடம் ரூ. 10லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் கன்னடப் படவுலகம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
 

Post a Comment