கூடுதல் விலைக்கு சினிமா டிக்கெட் விற்றதை தட்டி கேட்ட வாலிபர் கொலை

|


கோவை: திரையரங்கில் சினிமா டிக்கெட் அதிக விலைக்கு விற்றதை தட்டிக் கேட்ட வாலிபரை ஒரு கும்பல் அடித்து உதைத்தது. இதில் அந்த வாலிபர் படுகாயமடைந்து பலியானார்.

கோவை வேலாண்டிபாளையம் அடுத்த இடையார்பாளையத்தில் உள்ள கிருத்திகா திரையரங்கில், தீபாவளிக்கு வெளியான 'ஏழாம் அறிவு' படம் திரையிடப்பட்டது. புது படத்தை பார்க்க வேலாண்டிபாளையத்தில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரான ரமேஷ்(24) தனது நண்பர்கள் பவுல்ராஜ், லோகேஷ், சரவணன், கார்த்திக் ஆகியோருடன் சென்றிருந்தார்.

அப்போது அதிக விலையில் டிக்கெட் விற்கப்பட்டதாக தெரிகிறது. இதில் அதிருப்தியடைந்த ரமேஷ் நண்பர்களுடன் சேர்ந்து டிக்கெட்டை கிழித்தெறித்து திரையரங்கை விட்டு வெளியேறினார்.

வழியில் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்த ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கினர். இதில் ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் படுகாயமடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ், கோவை அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமான ரமேஷ்-க்கு ஒரு பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

பவுல்ராஜ், லோகேஷ், சரவணன் ஆகியோர் தனியார் மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, திரையரங்கு உரிமையாளரின் உறவினர் பரணிக்குமார்(27), கிஷோர்(26), ரமேஷ்(26), சுரேஷ்(27), டொமினிக்(26) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
 

Post a Comment