மலையாள நடிகை ஜோதிர்மயிக்கு விவாகரத்து கிடைத்தது

|


மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகை ஜோதிர்மயிக்கு விவாகரத்து கிடைத்து விட்டது. இனிமேல் அவர் முழு வீச்சில் சினிமாவில் கவனம் செலுத்தப் போகிறாராம்.

கோட்டயத்தைச் சேர்ந்தவர் ஜோதிர்மயி. ஆரம்பத்தில் மாடல் அழகியாக திகழ்ந்த அவர் பின்னர் சினிமாவுக்கு வந்தார். ஏராளமான மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் தலைநகரம், நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே இவருக்குக் கல்யாணமாகி விட்டது. கேரளாவைச் சேர்ந்த நிஷாந்த் குமார் என்பவரை மணந்து வாழ்க்கையும் நடத்தி வந்தார் ஜோதிர்மயி. இருப்பினும் தனக்குத் திருமணம் ஆனதையே அவர் வெளிப்படுத்திக் கொள்ளாமல் கமுக்கமாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் ஜோதிர்மயி தொடர்ந்து தீவிரமாக சினிமாவில் நடித்து வருவது குறித்து, குறிப்பாக கவர்ச்சியாக நடிப்பது குறித்து அவருக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து கோரி நிஷாந்த் குமார் திருவனந்தபுரம் கோர்ட்டில் மனு செய்தார்.

அவர்களிடம் குடும்ப நீதிமன்றம் கவுன்சிலிங் நடத்திப் பார்த்தது. ஆனால் ஒத்துவரவில்லை. இதையடுத்து இருவருக்கும் தற்போது விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இனிமேல் சினிமாவில் முழுவீச்சில் கவனம் செலுத்தப் போவதாக ஜோதிர்மயி தெரிவித்துள்ளார்.
 

Post a Comment