ராணுவ உடையை அவமதித்ததாக புகார்: நடிகர் மோகன்லால் மறுப்பு

|


டெல்லி:  கேரள அரசின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் விளம்பரப் படத்தில் ராணுவ உடையை அணிந்து நடித்து அந்த உடையை அவமதித்துவிட்டதாக நடிகர் மோகன்லால் மீது புகார் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை மோகன்லால் மறுத்துள்ளார்.

நடிகர் மோகன்லாலுக்கு கடந்த 2009ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு ராணு சீருடையும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மோகன்லால் கேரள சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் விளம்பரப் படத்தில் ராணுவ சீருடையில் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் ராணுவ சீருடையை அவமதித்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ராணுவ தலைமையக அதிகாரிகள் கூறியதாவது,

மலையாள திரையுலகின் ஜாம்பவானான நடிகர் மோகன்லால் கேரள அரசின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு எடுக்கப்பட்ட விளம்பர படத்தில் ராணுவ சீருடையை அணிந்து நடித்துள்ளார். அந்த விளம்பரம் கடந்த ஆண்டு டிசம்பரிலும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பானது.

இதன் மூலம் அவர் ராணுவ விதிகளை மீறியுள்ளார். ராணுவ நிகழ்சிசகளின்போது மட்டும் தான் அவர் அந்த சீருடையை அணிய வேண்டும். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, 2008ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா ஆகியோருக்கும் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கியுள்ளோம் என்றார்.

அந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக ஆஷிர்வாத் பிலிம்ஸ் நிறுவனம் மோகன்லாலுக்கு ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் தான் நடித்த கந்தஹார் படத்தில் அணிந்திருந்த சீருடையைத் தான் விளம்பரப் படத்தில் அணிந்திருந்தததாக மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

நீங்கள் அந்த விளம்பரத்தைப் பார்த்தால் அதிலேயே கந்தஹார் படத்தில் எனது கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறுவது தெரியும். நான் இந்த விளம்பரத்தை கேரள அரசுக்காக நடித்துக் கொடுத்தேன். அதற்காக நான் சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்று அவர் பேட்டியளித்துள்ளார்.

 

Post a Comment