மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான டாக்டருக்கு 4 ஆண்டு சிறை

|


லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான மருத்துவர் கான்ராட் முர்ரேவிற்கு நான்காண்டு சிறை தண்டனை அளித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவர் மீது ஜாக்சன் வைத்திருந்த நம்பிக்கைக்கு விரோதமாக நடந்து கொண்டதற்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

பாப் உலகின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி அமெரிக்காவின் உள்ள தனது பண்ணைவீட்டில் காலமானார். வலி நிவாரணி மருந்தை அவரின் குடும்ப மருத்துவரின் ஆலோசனையின்றி அதிகமாக எடுத்து கொண்டதே மரணத்துக்கு காரணமாக கூறப்பட்டது. அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன

இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனை பரிசோதித்த மருத்துவர்கள் வலிநிவாரணி மருந்தை அதிகம் உட்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என கூறினர்.

இதற்கு அவரது குடும்ப மருத்துவரான முர்ரே கொடுத்த ஆலோசனை தான் என கூறப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணையில் 12 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கடந்த 7ம் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அவரை குற்றவாளி என கூறி தீர்ப்பு வழங்கியது. முர்ரேவின் கவனக்குறைவாலேயே மைக்கேல் ஜாக்சன் மரணமடைய நேரிட்டது என்றும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

நான்கு ஆண்டு தண்டனை

இதைத் தொடர்ந்து செவ்வாய்கிழமையன்று தண்டனையை அறிவித்த நீதிபதி முர்ரே தனது ஐ போனில் மைக்கேல் ஜாக்சனுடன் பேசிய உரையாடலை 6 வாரங்கள் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த பதிவில் ஜாக்சனுக்கு அளவுக்கதிகமான மருந்துகளை மருத்துவர் அளித்தது தெளிவாகியுள்ளது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இந்த உரையாடல் பதிவை ஊடகங்களுக்கு அளித்து அதன் மூலம் முர்ரே பணம் சம்பாதிக்க நினைத்திருந்தது நிரூபணமாகிறது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

முர்ரே செய்த தவறுக்காக அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. மேலும் நூறு மில்லியம் டாலர் அபராதமாக அவர்களின் மூன்று குழந்தைகளுக்கு வழங்கவேண்டும். தவறும் பட்சத்தில் அவரின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் தீர்ப்பளித்தார்.

அதிகபட்ச தண்டனை தேவை

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாக்சனின் தாயார் காத்ரீனா, நான்காண்டு தண்டனை மட்டும் போதாது என்று கூறியுள்ளார். இந்த தண்டனை தனது மகனை மீண்டும் உயிர்பிழைக்க வைக்காது என்று கூறிய அவர், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள மைக்கேல் ஜாக்சனின் ரசிகர்களுக்கு இந்த தீர்ப்பு சற்றே ஆறுதல் அளிக்கும் என்று நம்பலாம்.
 

Post a Comment