'கேரளாவின் திட்டமிட்ட விஷமப் பிரச்சாரம்... டேம் 999 வெளியாகக் கூடாது!' - டாக்டர் ராமதாஸ்

|


சென்னை: கேரள அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'டேம் 999' என்ற திரைப்படத்தை இந்தியாவில் வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஆகியவற்றின் நிதி உதவியுடன் டேம் 999 என்ற பெயரில் ஆங்கில திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

முல்லைப் பெரியாற்று அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போன்ற காட்சிகள் நிறைந்த இப்படம் வெளியானால் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் பொது அமைதி பாதிக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று பல்வேறு வல்லுநர் குழுக்கள் ஏற்கனவே அறிக்கை அளித்துள்ள நிலையில் எப்படியாவது அந்த அணையை உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 'டேம் 999' திரைப்படத்தை கேரள அரசு நிதி உதவி செய்து தயாரித்திருக்கிறது.

இது கேரளாவின் திட்டமிட்ட விஷமப் பிரச்சாரம். எனவே இந்த திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக வலியுறுத்த வேண்டும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

Post a Comment