தமிழக அரசின் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு- டேம் 999 இயக்குனர் பேச்சு

|


கொல்லம்: டேம் 999 படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக படத்தின் இயக்குனர் சோஹன்ராய் தெரிவித்துள்ளார்.

மலையாள இயக்குனர் சோஹன்ராய் இயக்கிய டேம் 999 படத்தில் முல்லைப்பெரியாறு அணை உடைவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இந்த படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த படம் நேற்று துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் திரையிடப்பட்டது.

இதையொட்டி சோஹன்ராய் அளித்த பேட்டியில் கூறியதாவது,

என்னுடைய படத்தில் ஒரு இடத்தில் கூட முல்லைப்பெரியாறு என்ற வார்த்தையை பயன்படுத்தவி்ல்லை. அணைக் கட்டுகள் ஒரு தண்ணீர் வெடிகுண்டாகும். இந்த அணைக்கட்டுகளால் ஏற்படும் சமுதாய பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த படத்தின் நோக்கம்.

போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் அணையால் ஏற்படும் இழப்புகள் குறித்து தான் இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதை புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு சென்சார் போர்டு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் இந்த படத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது முறையல்ல. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்றார்.
 

Post a Comment