வேலாயுதம் பட பேனர்களை கிழித்து பெங்களூரில் கன்னட அமைப்பு போராட்டம்

|


பெங்களூர்: கர்நாடக மாநிலம் உதயமான ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினத்தில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களைத் திரையிடுவதை எதிர்த்து பெங்களூரில் நேற்று கன்னட ரட்சண வேதிகே அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். வேலாயுதம் படம் திரையிடப்பட்ட தியேட்டரை முற்றுகையிட்டு பேனர்களைக் கிழித்ததால் அங்கு படம் நிறுத்தப்பட்டது.

பெங்களூரில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் விஜய் நடித்துள்ள வேலாயுதம் படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று கர்நாடகத்தில் அந்த மாநிலம் உருவான நாள் ராஜ்யோத்சவா தினமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து அங்கு அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வேலாயுதம் திரையிடப்பட்டிருந்த ராதாகிருஷ்ணா என்ற தியேட்டருக்கு 100க்கும் மேற்பட்ட கன்னட ரட்சண வேதிகே என்ற அமைப்பினர் வந்தனர். தியேட்டரை முற்றுகையிட்ட அவர்கள் பட பேனர்களை கிழித்தெறிந்தனர்.

இன்று ராஜ்யோத்சவா தினம். இந்த நாளில் கன்னடப் படங்களை மட்டுமே திரையிட வேண்டும். இன்றுமட்டுமல்ல இன்னும் ஒரு மாதத்திற்கு கன்னடப் படங்களை மட்டுமே திரையிட வேண்டும் என்று அவர்கள் மிரட்டினர். இதையடுத்து படக் காட்சியை தியேட்டர் நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் படம் பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

தமிழ்ப் படம் திரையிடப்படுவதை தடுத்து நிறுத்தி கன்னட அமைப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.
 

Post a Comment