தணிக்கை குழு அனுமதி மறுப்பு: 'மகான் கணக்கு' ஆனது 'காந்திகணக்கு'!

|


காந்தி கணக்கு என்ற தலைப்புக்கு சென்சார் அனுமதி மறுத்துவிட்டது. எனவே இந்தத் தலைப்பு மகான் கணக்கு என்று மாற்றிவிட்டனர் இயக்குநரும் தயாரிப்பாளரும்.

'பூஜா பிலிம் இன்டர்நேஷனல்' எனும் படநிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ரமணா கதாநாயகனாகவும், ரீச்சா சின்ஹா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மனோபாலா, சரவண சுப்பையா, ஸ்ரீநாத், தேவதர்ஷினி என பெரிய பட்டாளமே நடித்துள்ளது. கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, ஏ.கே.ரிஷால்சாய் இசையமைத்துள்ளார். கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சம்பத் ஆறுமுகம்.( இயக்குனர் சசியின் உதவியாளர்). ஜி.பி.எஸ்.தயாரித்துள்ளார்.

படம் திரையிடுவதற்கு தயாராக உள்ள நிலையில் படத்தின் தலைப்புக்கு தணிக்கை குழு அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

இது பற்றி இயக்குனர் சம்பத் ஆறுமுகம் கூறுகையில், "காந்தி கணக்கு' படப் பெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யும் போது படத்தின் கதையையும்,தலைப்பிற்கான விளக்கத்தையும் சொன்னபோது அதை ஏற்றுக் கொண்ட பிறகுதான் அனுமதி அளித்தார்கள்.

தற்போது பட வேலைகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. தணிக்கைக்கு அனுப்பியபோது தலைப்பை மாற்றிவிட்டு வந்தால்தான் படமே பார்ப்போம் என தணிக்கை குழு அதிகாரிகள் சொன்னார்கள். முதலில் படத்தை பாருங்கள். பார்த்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் என்று தலைப்பு வைத்ததற்கான விளக்கத்தையும் சொன்னோம். அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அத்துடன் முதலில் படத்தோட தலைப்புக்கே சென்சார்தான் அதை மாற்றி விடுங்கள் என விடாப்பிடியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

'நேர்மையற்ற எந்த ஒரு வியாபாரமும் வன்முறைக்கு வித்திடும்' இதுதான் காந்தியோட கணக்கு.இதைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறோம். உலகம் முழுவதும் காந்தியோட கணக்கு அகிம்சை கணக்கு என்பது தெரியும். தமிழ் நாட்டில் மட்டும் 'காந்தி கணக்கு' என்றால் வராத கணக்கு என்று தப்பான அர்த்தம் கற்பித்துள்ளனர்.

சுதந்திரத்திற்காக போராடினார் காந்தி. 'காந்தி கணக்கு' என்கிற வார்த்தைக்கு இருக்கிற தப்பான அர்த்தத்தை மாற்றுவதற்குக் கூட எனக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. இது எனக்கு வருத்தத்தை தந்தாலும் படம் திரைக்கு வர தாமதமாக கூடாது என்ற எண்ணத்திலும், தலைப்பு மாறினாலும் சொல்லப்பட்டுள்ள கருத்து நிச்சயம் மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கையிலும் தலைப்பை மாற்ற சம்மதித்தோம்.

நம்ம நாட்டுல எவ்வளவோ மகான்கள் வாழ்ந்திருக்காங்க. வாழ்ந்திட்டு இருக்காங்க. காந்தியும் ஒரு மகான் தான். அதனால் தான் 'காந்தி கணக்கு 'படப் பெயரை மகான் கணக்கு என்று மாற்றியுள்ளோம்.

படத்தைப் பார்த்த பிறகு அதே தணிக்கை குழு அதிகாரிகள், ''எந்தவித ஆபாச,வன்முறை காட்சிகள் இல்லாமல் சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான படம் இது. நீங்க பண்ற படங்கள் எல்லாம் இந்த மாதிரி சமூக அக்கறையுள்ள படமாக அமையுட்டும்ன்னு வாழ்த்துறோம்." என மனம் திறந்து பாராட்டினார்கள். 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். 'மகான் கணக்கு' விரைவில் திரைக்கு வரும்," என்றார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்த 'நான் காந்தி அல்ல' என்ற படமும் இதே மாதிரி சிக்கலைச் சந்தித்தது. அந்தத் தலைப்பை மாற்றுமாறு சென்சார் கூறியதால், பின்னர் 'நான் மகான் அல்ல' என்று பெயர் மாறி வெளியானது நினைவிருக்கலாம்.
 

Post a Comment