கணவனைப் பிரிந்த மனைவி்யின் கஷ்டம் புரிகிறது! - நயன்தாரா

|


தெலுங்குப் படமான ஸ்ரீராமராஜ்யத்தில் சீதையாக நடித்ததால், கணவனைப் பிரிந்த மனைவியின் சோகம் என்னவென்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது, என நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.

நயன்தாரா, தெலுங்கில் கடைசியாக நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் சமீபத்தில் ரிலீசானது. தமிழிலும் இப்படம் டப் செய்து வெளியிடப்படுகிறது. இப்படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடித்துள்ளார். பாலகிருஷ்ணா ராமராக நடித்துள்ளார்.

இந்தப் பட அனுபவம் தன்னை மனதளவில் பெரிய மாற்றத்துக்குள்ளாக்கியிருப்பதாக நயன்தாரா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தை எனது பிறந்த நாளான கடந்த 18-ந்தேதி பார்த்தேன். இந்த படம் எனது சிறந்த பிறந்தநாள் பரிசு. சீதை வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, என்னால் நடிக்க முடியுமா? என்று பயந்தேன். அஞ்சலி தேவி போன்ற நடிகைகள் செய்யவேண்டிய வேடம் அது.

அதில் இயக்குனர் எனது ஸ்டைலில் சுதந்திரமாக நடிக்க வைத்தார். சில நாட்களிலேயே கேரக்டரில் ஒன்றினேன். விரதம் இருந்தேன். சீதையாகவே வாழ்ந்தேன். அப்போதுதான் கணவனை இழந்த மனைவியின் வலியை, கஷ்டங்களை என்னால் உணர முடிந்தது.

படத்தில் பர்ணசாலை காட்சிகளைத்தான் முதலில் படமாக்கினார்கள். அதனால் நான் முழுமையாக சைவத்துக்கு மாறினேன். தினமும் கோவிலுக்கு சென்றேன். பூஜைகள் செய்தேன். இந்த படத்தில் நடிப்பதற்கு பாலகிருஷ்ணாதான் முக்கிய காரணம். அவர்தான் என்னை பரிந்துரை செய்தார்.

அவருடன் ஏற்கனவே 'சிம்ஹா' என்ற படத்தில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை தந்ததற்காக மனப்பூர்வமான நன்றி," என்றார்.
 

Post a Comment