ட்விட்டர், பேஸ்புக்கில் போலி கணக்கு: சைபர் கிரைம் போலீசில் நயன்தாரா புகார்!

|


ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூகத் தளங்களில் தன் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி ரசிகர்களுடன் உரையாடி வரும் நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார் நடிகை நயன்தாரா.

டுவிட்டர், பேஸ் புக்கில் தனது பெயரில் மோசடி நடப்பதாக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டி இருந்தார். அடையாளம் தெரியாத சிலர், நயன்தாரா பெயரில் இவற்றை உருவாக்கி ரசிகர்களுடன் தொடர்பு வைத்து இருந்தனர். அதை உண்மை என நம்பி நிறைய பேர் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களும், அவர் நடித்த படங்கள் பற்றிய விமர்சனங்களும் அனுப்பி வைத்தனர்.

அத்துடன் முல்லைப் பெரியாறு அணை உடைவது போன்று எடுக்கப்பட்ட `டேம் 999' படத்துக்கு நயன்தாரா ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்து இருப்பது போன்ற செய்தியும் அதில் இடம் பெற்று இருந்தது.

இது குறித்து நயன்தாரா, கவனத்துக்கு கொண்டு சென்றதும் அதிர்ச்சியானார். நான் டுவிட்டரிலோ பேஸ் புக்கிலோ இல்லை. போலியாக அவை உருவாக்கப்பட்டு உள்ளது. அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும் என்று நேற்று அறிவித்தார்.

ஆனால் அப்படியும் அவர் பெயரில் அந்த தளங்களில் பக்கங்கள் தொடர்ந்து இயங்கின.

இதையடுத்து அவர் சைபர் க்ரைம் போலீஸ் உதவியை நாடியுள்ளார். இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், "நடிகை என்பதால் டுவிட்டரில் என் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது நான் இல்லை என்று தெளிவுப்படுத்தி விட்டேன். போலியாக உருவாக்கப்பட்ட எனது பெயரை ட்விட்டரில் இருந்து நீக்கி விடும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. எனவே சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன்," என்றார்.
 

Post a Comment