நடிகர் ரவீந்தர் தலைமையில் கோவாவில் மலையாள பத்திரிக்கையாளர்கள் அடாவடி- தமிழகத்தினர் பதிலடி

|


சென்னை: கோவாவில் நடந்து வரும் 42வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவில் நடித்துப் பிரபலமான கேரளாவைச் சேர்ந்த நடிகர் ரவீந்தர் தலைமையில் கேரளத்து பத்திரிக்கையாளர்கள் சிலர் கூடி ஊர்வலமாகப் போய் முல்லைப் பெரியாறு அணை இடியப் போகிறது என்று கோஷமிட்டனர். இதைப் பார்த்து கொந்தளித்து விழாவுக்கு வந்திருந்த பல்வேறு திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், உங்களுக்கு ஏன் இந்தக் கொலை வெறி என்ற கோஷத்துடன் பதிலடி ஊர்வலம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திடீரென 50க்கும் மேற்பட்ட தமி்ழ் மாணவர்கள் கூடியதால், மலையாளத்துப் பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பனாஜியில் 42வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் டேம் 999 படத்தைத் திரையிட கேரளாவைச் சேர்ந்த சிலர் முயற்சித்தனர். ஆனால் அதை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் முறியடித்து விட்டனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் 30 பேர் கூடி ஊர்வலமாக சென்றனர். முல்லைப் பெரியாறு அணை இடியப் போகிறது. அதை இடிக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். இந்த திடீர் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் நடிகர் ரவீந்தர்.

இவர் வேறு யாருமல்ல, ஒரு தலைராகம், சகலகலாவல்லவன், தங்கமகன் உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ்ப் படங்களில் அந்தக் காலத்தில் வில்லனாக நடித்தவர். தமிழ் சினிமாவில் நடிக்கப் போய்த்தான் இவர் பிரபல நடிகராக மாறினார். அடிப்படையில் இவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்தத் திடீர் போராட்டத்தைப் பார்த்து வெகுண்டனர், விழாவுக்கு வந்திருந்த பல்வேறு பகுதி திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள். அதிரடியாக 50க்கும் மேற்பட்டோர் கூடி, அவர்களும் ஒரு ஊர்வலத்தை நடத்தினர்.

8 ஆயிரம் ஏக்கர் விளைநிலம், 3 கோடி மக்கள் வறட்சியில் சாகும் அவலத்தைத் தடுக்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும், அணையைச் சிதைப்பது, இந்திய ஒற்றுமையைச் சிதைத்துவிடும், அன்பிற்குரிய கேரள மக்கள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க வேண்டும், அன்பிற்குரிய கேரள மக்களே! ஏன் இந்த கொலைவெறி? என்று அவர்கள் கோஷமிட்டதால் கேரள போராட்டக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்தப் போராட்டங்களால் விழா நடந்த இடத்தில் பரபரப்பும் தொற்றிக் கொண்டது.

அத்தோடு நிற்காத தமிழ் மாணவர்கள், அங்கு கூடியிருந்த சர்வதேச பத்திரிக்கையாளர்கள் இந்திய பத்திரி்ககையாளர்களை திரட்டி அவர்களிடம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான உண்ணை நிலவரத்தை விளக்கிக் கூறினர்.

இதற்கிடையே போலீஸார் விரைந்து வந்து தமிழ் மாணவர்களைக் கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் முதலில் கேரள குழுவினரை கலைந்து போகச் சொல்லுங்கள். அவர்கள் போனால்தான் நாங்கள் போவோம். அவர்கள் போராட்டம் நடத்தினால் நாங்களும் நடத்துவோம் என்று உறுதிபடக் கூறி விட்டனர். இதையடுத்து கேரளக் குழுவினர் கலைந்து போனார்கள். அதன் பிறகே தமிழ் மாணவர்களும் கலைந்து சென்றனர்.

கேரளக் குழுவினரின் திடீர் போராட்டத்தால் நிலை குலைந்து போகாமல் டக்கென திரண்டு தமிழ் மாணவர்கள் நடத்திய பதிலடி போராட்டத்தால் அங்கிருந்தவர்கள் வியப்பில் மூழ்கினர்.
 

Post a Comment