சினேகனுடன் மனைவிக்கு கள்ளத் தொடர்பு - குழந்தையையாவது என்னுடன் வாழ விடுங்கள் - கணவர் வழக்கு

|


சென்னை: நடிகர் சினேகனுடன் எனது மனைவிக்கு தொடர்பு இருப்பது உண்மையே. இப்போது என் மனைவி விவாகரத்து கேட்டுள்ளார். எனவே குழந்தையாவது என்னுடன் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும். சினேகனும் என்மனைவி ஜமுனா கலாதேவியும் இதற்கு இடையூறு செய்வதை தடை செய்ய வேண்டும்' என்று சென்னை குடும்பநல கோர்ட்டில் கணவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை குடும்பநல கோர்ட்டில் மடிப்பாக்கம் சக்திநகர் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்த ஏ.பிரபாகரன் (வயது 35) தாக்கல் செய்த மனுவில், "எனது சகோதரியின் மகனை நாட்டியப் படிப்புக்காக அழைத்து செல்லும்போது 2002-ம் ஆண்டு ஜமுனா கலாதேவி (29) எனக்கு அறிமுகமானார். அதன் பின்னர் 2 ஆண்டுகளாக இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் காதலித்தோம்.

கடுமையான எதிர்ப்புக்கு இடையே 1.12.04 அன்று வடபழனி கோவிலில் திருமணம் செய்துகொண்டு, திருமணத்தை பதிவு செய்தோம். என்னை திருமணம் செய்வதற்காக கட்டிய துணியோடு ஜமுனா வந்துவிட்டார். எல்லா செலவுகளையும் நானே கவனித்துக் கொண்டேன்.

நாட்டியப் பள்ளி

நான் தனியார் கம்பெனி நிறுவனம் ஒன்றின் மேலாளர். 7.10.06 அன்று எங்களுக்கு சஞ்ஜனாஸ்ரீ என்ற பெண் குழந்தை பிறந்தது. நாட்டியப் பள்ளி வேண்டுமென்று என்னை ஜமுனா வற்புறுத்தியதால், அதற்கு நான் அனுமதி அளித்தேன்.

அதன் பிறகு நாட்டியத்திலேயே ஜமுனா கவனம் செலுத்தியதால், குழந்தையை முழுக்க முழுக்க நானே கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜமுனா பெற்றோரும் எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை.

இந்த நிலையில் மற்றொரு நாட்டியப் பள்ளியை 2009-ம் ஆண்டு செப்டம்பரில் வேளச்சேரியில் ஜமுனா தொடங்கினார். தொடக்க நிகழ்ச்சிக்கு 'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா' என்ற பாடலை எழுதிய சினிமா பாடகர் சினேகன் வந்திருந்தார்.

அதன்பின்னர் நாட்டியப் பள்ளிக்கும், வீட்டுக்கும் சினேகன் அடிக்கடி வரத் தொடங்கினார். பல தவறான வாக்குறுதிகளை ஜமுனாவுக்கு அளித்து, அவரது மனதை கலைத்துவிட்டார்.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டுமே நாட்டியம் கற்றுத்தர வேண்டும் என்ற பள்ளி விதியை மீறி சினேகனுக்கு ஜமுனா நாட்டியம் கற்றுத் தந்தார். சினிமாவில் நாட்டிய இயக்குனராக வாய்ப்பு வாங்கித் தருவதாக ஜமுனாவிடம் சினேகன் ஆசை காட்டியுள்ளார்.

இதற்கு ஆசைப்பட்ட ஜமுனாவும், எனது பேச்சை கேளாமல் சினேகனுடன் சுற்றத் தொடங்கினார். அவர்களின் சினேகம் கட்டுப்பாட்டை தாண்டிச் சென்றது. தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டனர்.

நான் தூங்கிய பிறகு மொட்டை மாடிக்குச்சென்று இரவு முழுவதும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார். இதுபற்றி நான் எவ்வளவோ அறிவுரை கூறியும் அவற்றை ஜமுனா நிராகரித்தார். என்னையும், குழந்தையையும் கவனிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் என்னுடன் வாழமாட்டேன் என்றும், பெற்றோர் வீட்டுக்கு செல்லப் போவதாகவும் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பரில் கூறினார். அதன் பின்னர் எல்லா உடமைகளையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

எதையுமே அவரது பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வரவில்லை என்றாலும், பல நகைகளை வீட்டில் இருந்து கொண்டு சென்றுவிட்டார். புதிய உறவு ஏற்பட்டதால் நாட்டிய பள்ளியை கவனிக்க முடியாமல் அவற்றை மூடினார்.

எனக்கு கடந்த மார்ச் மாதம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு நான் விரும்பவில்லை. ஆனாலும் என்னுடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார்.

குழந்தையையாவது வாழ விடுங்கள்...

என்னை விட்டு ஜமுனா பிரிந்து சென்று, தனது சகோதரர் விஜய் ஆதிராஜ், தாயார் விஜயகுமாரி, மற்றும் தந்தையுடன் சேர்ந்து எனது குழந்தையை அபகரிக்க முயன்றார்.

தற்போது என்னுடன் குழந்தை வசிக்கிறாள். எனவே என்னிடமே குழந்தை வாழ வேண்டும் என்றும், அதற்கு இடையூறு செய்வதற்கு ஜமுனா, சினேகன் உள்ளிட்டோருக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜமுனாகலாதேவி புகார்

இந்த நிலையில் நேற்று காலையில் ஜமுனாகலாதேவி, தனது வக்கீல் வானதி சீனிவாசனுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுத்தார்.

பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், "எனது மார்பில் சினேகன் பெயரை பச்சைகுத்தி இருப்பதாக பொய்யான தகவலை எனது கணவர் பரப்பிவிட்டுள்ளார். நான், எனது மகளின் பெயரைத்தான், பச்சை குத்தி உள்ளேன். எனது மகளை மீட்டுத்தரும்படி நான் ஏற்கனவே மடிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்து, எனது மகளை மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன். நான் சினேகன் கட்டுப்பாட்டில் இல்லை," என்றார்.

குழந்தையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வழக்குப் போடவிருப்பதாகவும் ஜமுனா கலாதேவி கூறினார்.
 

Post a Comment