ஐஸ்வர்யாராய் பிரசவ செய்தி: மீடியாவுக்கு புதிய கட்டுப்பாடு

|


மும்பை: ஐஸ்வர்யா ராயின் பிரசவ செய்திகளை வெளியிட தொலைக்காட்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை தனியார் டெலிவிஷன் ஆசிரியர் கூட்டமைப்பு விதித்துள்ளது.

மீடியாவின் இந்த சுயகட்டுப்பாடு தன்னை நெகிழ வைப்பதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாராய் பற்றிய செய்திகளுக்கு அனைத்து மாநில சேனல்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

38 வயதாகும் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனை திருமணம் செய்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு எப்போது குழந்தை பிறக்கும் என்று போட்டி போட்டுக்கொண்டு டி.வி.க்கள் செய்தி ஒளிபரப்புகின்றன.

நவம்பர் 8-ந் தேதி குழந்தை பிறக்கும் என்று முன்பு ஒளிபரப்பானது. அதன் பிறகு அபூர்வ நாளான (11-11-11) நேற்று குழந்தை பிறக்க ஏற்பாடாகி இருப்பதாக தகவல் வெளியிட்டன. மேலும் ஐஸ்வர்யாராய் கர்ப்பம், பிரசவம் பற்றிய தகவல்களை முக்கிய செய்தியாக (பிளாஷ் நியூஸ்) ஒளிபரப்பின.

இதையடுத்து தனியார் டெலிவிஷன் ஆசிரியர்கள் கூட்டமைப்பு அவற்றுக்கு புதிதாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஐஸ்வர்யாராய் பிரசவம் பற்றி தகவல் சொல்லும் போது தேவையில்லாமல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் வேறு குழந்தையின் படத்தைக் காட்டக்கூடாது.

இது தொடர்பான செய்திகளை, படங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக அமிதாப்பச்சன் வீட்டின் முன்போ, ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறக்கும் ஆஸ்பத்திரியின் முன்போ ஒளிபரப்பு வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது. மக்களின் கவனத்தை வேறு வகையில் திசை திருப்பும் வகையில் ஒளிபரப்பக்கூடாது, என்று கூறப்பட்டுள்ளது.


தனியார் டெலிவிஷன் கூட்டமைப்பு துணை தலைவர் அர்னாப் கோஸ்வாமி கூறுகையில், ஐஸ்வர்யாராய்க்கு குழந்தை பிறப்பது பெரிய விஷயம் அல்ல, அன்றாடம் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய் கட்ஜு கூறுகையில், நாட்டில் 80 சதவீத மக்கள் பல்வேறு இன்னல்களில் வசிக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சுகாதார சீர்கேடு போன்ற பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் டெலிவிஷன்கள் மக்கள் பிரச்சினைகளை திசை திருப்புவது போல், சினிமா நட்சத்திரங்கள் பற்றியும், பேஷன்ஷோ, கிரிக்கெட் பற்றியும் ஒளிபரப்புகிறார்கள், என்றார்.

இதற்கிடையே ஐஸ்வர்யாராயின் பிரசவம் பற்றிய செய்திகளை ஒளிபரப்புவதற்கு நடிகர் அமிதாப்பச்சன் கண்டனம் தெரிவித்தார். இதனால் தனிப்பட்ட ஒரு குடும்ப பெண்ணின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று தனது இணையதள டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இப்போது டெலிவிஷன் ஆசிரியர் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ள சுய கட்டுப்பாட்டு நடவடிக்கையை அறிந்ததும், அதுகுறித்த தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இந்த சுய கட்டுப்பாடு தன் மனதைத் தொட்டுவிட்டதாகவும், உலகில் எங்கும் இதனைப் பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Post a Comment