டேம் 999 பட இயக்குநர் சோஹன்ராய் இன்று தமிழக உள்துறைச் செயலரிடம் விளக்கம்

|


சென்னை: சர்ச்சைக்குரிய டேம் -999 படத்தின் இயக்குநர் சோஹன் ராய், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.

டேம் 999 ஆங்கிலத் திரைப்படம் முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இந்த திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதை குறிப்பிடும் வகையில் அந்த படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அபாயம் உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தடைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடையை நீக்க வலியுறுத்தி டேம் 999 திரைப்படத்தின் இயக்குநர் சோஹன்ராய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், திரைப்படத்திற்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது என்று தமிழக அரசின் உள்துறைச் செயலரை சந்தித்து நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தவிட்டது.

இதனையடுத்து இன்று காலை இன்று காலை சென்னை வந்த சோஹன்ராயை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம் சென்று, உள்துறைச் செயலாளரை இயக்குநர் சோகன் ராய் நேரில் சந்திக்க உள்ளார்.

அப்போது, டேம் – 999 திரைப்படம் குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, இரு மாநிலங்களுக்கு இடையே, பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில்,சோஹன் ராய் விளக்கம் அளிக்க சென்னை வந்துள்ளார்.
 

Post a Comment