"ரசிகன் எக்ஸ்பிரஸ்" பயணத்துடன் ரஜினி பிறந்த நாள் ஆரம்பம்!

|

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்ல விரும்பும் ரசிகர்களுக்காக 'ரசிகன் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் வாகனத்தை இயக்குகிறது விஜய் டிவி. திங்கள்கிழமை காலை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவிலிருந்து புறப்பட்ட இந்த வாகனம் தமிழகமெங்கும் ஒரு ரவுண்ட் அடித்து ரசிகர்களின் வாழ்த்துக்களைச் சுமந்துகொண்டு மீண்டும் வரும் டிசம்பர் 10-ம் தேதி சென்னை வந்து சேர்கிறது.

எதற்காக இந்த எக்ஸ்பிரஸ்?

"ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே உண்டு. நேரில் சொல்ல முடியாதவர்களின் வசதிக்காக இந்த வாகனம் அவர்கள் இருக்குமிடத்துக்கே சென்று ரஜினிக்கு ரசிகனின் வாழ்த்துக்களைச் சேகரித்துக் கொண்டு வருகிறது. அனைத்து ரசிகர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வாழ்த்துக்கள் பின்னர் தலைவருக்கு சேர்க்கப்படும்," என்றார் சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் என் ராமதாஸ்.

இந்தப் பேருந்தை ஏவி எம் சரவணன் மற்றும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 62 தேங்காய்கள் உடைக்கப்பட்டு, திருஷ்டி பூசணிக்காய் உடைத்து பேருந்தை வழியனுப்பி வைத்தனர் சென்னை மற்றும் சுற்றுப் புறங்களிலிருந்து வந்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள்.

சைதை பகுதி தலைமை மன்றத்திலிருந்து சைதை ரவி, ரசிகர்களுடன் வந்து பேனர் வைத்து கலக்கியிருந்தார். அவருடன் சைதை முருகன், தாம்பரம் கேசவன், தி நகர் பழனி, பிஆர்ஓ ரியாஸ் உள்பட பலரும் பங்கேற்றனர்.

இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், ஏற்கெனவே சேலம், நாமக்கல் மாவடங்களைக் கடந்து, நாளை ஈரோடு செல்கிறது. டிசம்பர் 2-ம் தேதி கோவை, டிசம்பர் 3-ல் திருப்பூர், கரூர், காங்கேயம், டிசம்பர் 4 -ம் தேதி மதுரை, டிசம்பர் 5-ம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை, டிசம்பர் 6-ம் தேதி திருச்சி, டிசம்பர் 7-ம் தேதி கும்பகோணம், சிதம்பரம், டிசம்பர் 8-ம் தேதி கடலூர், பாண்டி, டிசம்பர் 9-ம் தேதி வேலூர், காஞ்சிபுரம் பகுதிகளில் பயணிக்கிறது.

டிசம்பர் 10-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறது.


 

Post a Comment