மயக்கம் என்ன படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் விதிமுறை மீறல் - அன்புமணி குற்றச்சாட்டு

|


சென்னை: மயக்கம் என்ன படத்தில் புகைப் பிடிக்கும் காட்சியில் மத்திய அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இனி வரும் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் மத்திய அரசின் விதிகளை சினிமாக்காரர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி அன்புமணி விடுத்துள்ள அறிக்கை:

திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கு நவம்பர் 14 முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ள புதிய திரைப்படங்கள் மத்திய அரசின் உத்தரவினை பின்பற்றாத நிலையே இன்னமும் நீடிக்கிறது.

இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழ் திரைப்படத் துறையினர் சட்டத்தை மதித்து நடக்க முன்வர வேண்டும். தமிழக அரசும் இதனை கட்டாயப்படுத்த வேண்டும்.

மயக்கம் என்ன

சமீபத்தில் வெளிவந்துள்ள `மயக்கம் என்ன' எனும் திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் புதிய உத்தரவு செயலுக்கு வந்த நாளுக்கு பின்னரே தணிக்கைத் துறை சான்று பெற்றிருந்தும் சட்டவிதிமுறைகள் இதில் பின்பற்றப்படவில்லை.

'திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடிக்கும் கதாநாயகர், படம் தொடங்கும் போது புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகளை விளக்கி பேச வேண்டும், புகைபிடிக்கும் காட்சியின் போது கீழே எச்சரிக்கை வாசகத்தை ஓடவிட வேண்டும்' என்கிற அரசு உத்தரவு இந்த திரைப்படத்தில் இடம்பெறவில்லை.

இந்த முக்கியமான விதிகள் தமிழ்நாட்டின் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் இன்னமும் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனவே தமிழ் திரைப்படத் துறையினர் இனியும் தாமதிக்காமல் மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Post a Comment