விஜய் சொன்ன அஸ்க் லஸ்கா... மதன் கார்க்கி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இலியானாவைப் பார்த்து சிரித்த விஜய், 'அஸ்க் லஸ்கா' என்று பாடியதும் இலியும் சிரித்தார். இந்த ரகளையான பாடல் இடம் பெற்ற படம் ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்காக ஷங்கர் இயக்கியிருக்கும் 'நண்பன்'. அதென்ன 'அஸ்க் லஸ்கா?' என்று தேடிப் பார்த்தால், அதற்கு அநேகமாக இந்தியாவுக்குள் அர்த்தம் தேட முடியாது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்திருப்பதால் 'ஒமகசீயா' போல பொத்தாம் பொதுவில் எழுதப்பட்ட வார்த்தையும் கிடையாது. இதன் பொருள் சொல்லக்கூடிய ஒரே ஒருவர், பாடலை எழுதியிருக்கும் மதன் கார்க்கி மட்டுமே.

'கோ'வில் இடம்பெற்ற 'என்னமோ, ஏதோ...' பாடலில் அரிதான தமிழ் வார்த்தைகளைக் கொண்டே அசத்திய மதன் கார்க்கி, 'ஏழாம் அறிவி'ல் முதல் முதலாக தமிழ்ப் படத்தில் சீன மொழிப் பாடலை எழுதி சிலிர்க்க வைத்தார். அந்த வரிசையில் இடம்பெறத் தக்க பாடலாகிறது 'அஸ்க் லஸ்கா'.

''இதுல 'அஸ்க்'ங்கிறது துருக்கிய மொழி வார்த்தை. 'லஸ்கா' ங்கிறது ஸ்லோவேக்கிய மொழி வார்த்தை. இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றேதான். அது, 'காதல்'... இதே போல இந்தப் பாடல்ல பதினாறு உலக மொழிகள்ல காதலைக் குறிக்கிற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கு..!'' என்று சிரித்த கார்க்கி தொடர்ந்தார்...

''இலியானாகிட்ட தன் காதலை விஜய் சொல்ற பாடலானதால, அதுக்கு வித்தியாசமான கான்செப்ட் யோசிச்சு இப்படி உலக மொழிகள்ல காதலைச் சொல்ல முடிவாச்சு. இதுக்காக 60 மொழிகள்ல இருந்து காதலுக்கான வார்த்தைகளை சேகரிச்சு அதுல ஹாரிஸோட இசைக்குப் பொருந்தி வர்ற ஒலிகளோடயும், எதுகை மோனைக்குப் பொருத்தமா வர்றது போலவும் இப்படி பதினாறு மொழி வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். உலக மொழிகளோட தொடர்ற பாடல் அப்படியே இந்திய மொழிகளுக்கும் வந்து தமிழ்ப்பாடலா ஒலிக்கிற விதத்துல எழுதினேன். விஜய் ஒருமுறை அப்பாவை சந்திச்சப்ப இந்தப் பாடலைச் சொல்லி, 'கார்க்கி நல்லா எழுதியிருக்கார்'னு பாராட்டி யிருக்கார்..!''

மேற்படி பாடலோடு ஒரு மாணவனின் ஏமாற்ற மனநிலையைக் குறிக்கும், 'எந்தன் கண்முன்னே காணாமல் போனேனே...' என்ற பாடலையும் எழுதியிருக்கும் கார்க்கி, 'எந்திரனை'த் தொடர்ந்து இந்தப்படத்தில் ஷங்கருடன் சேர்ந்து வசனங்களையும் எழுதியிருக்கிறார்.

''ரோபோ தொழில்நுட்பம் 'எந்திரன்' வசனங்களுக்குத் தேவைப்பட்டதைப் போல இன்றைய கல்வி முறையைப் பற்றிய செய்தி சொல்ற இது எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களோட கதையா ஆனதால அப்படி மாணவர்களோடவே பழகி வர்ற பேராசிரியரான எனக்கு இதுல எழுத வாய்ப்புக் கொடுத்தார் ஷங்கர். நான் முழுப்படத்துக்கும் வசனம் எழுத, அவரும் ஒரு லேயர் எழுதி ரெண்டிலும் சிறந்ததை எடுத்துக்கிட்டோம். ஒரிஜினல் 'த்ரீ இடியட்ஸ்' படத்தோட செய்திகளை மாற்றாம இன்னும் சிறந்ததை ஹானஸ்டா சொல்லியிருக்கோம்..!'' என்றார் கல்லூரியில் கல்விக்கும், படங்களில் காதலுக்கும் அர்த்தம் பல சொல்லும் பேராசிரியர் மதன் கார்க்கி.


 

Post a Comment