மண்ணுலகை விட்டு மறைந்தும் ரசிகர்கள் நெஞ்சில் மறையாமல் வாழும் ‘சில்க்’ ஸ்மிதா

|


சில்க் ஸ்மிதா இந்த பெயர் தமிழக ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் இடம் பெற்றுவிட்டது. எழுபதுகளில் திரையுலக வாழ்க்கையை தொடங்கி 16 ஆண்டுகாலம் தனது கவர்ச்சி நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட அந்த கனவுக் கன்னியின் பிறந்த நாள் இன்று.

வாழ்க்கையை மாற்றிய வண்டிச்சக்கரம்

ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து சென்னைக்கு வந்த விஜயலட்சுமியை ( சில்க்கின் இயற்பெயர்) தமிழகம் அரவணைத்துக் கொண்டது. தமிழ் திரையுலகில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கினார் அவர்.

அவரை வினுச்சக்ரவர்த்தி தனது வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் ஸ்மிதா என்ற பெயரில் அறிமுகம் செய்தார். திரைப்படத்தில் சாராயம் விற்கும் கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு சில்க் என்ற பெயர் சூட்டப்பட்டது. பின்னாளில் அந்த பெயர்தான் திரைப்பட ரசிகர்கள் அதிகம் உச்சரிக்கப்போகும் பெயர் அதுவாகத்தான் இருக்கும் என்று அவருக்கு சத்தியமாக தெரிந்திருக்காது.

தென்னிந்திய மொழிகளில் ராஜ்ஜியம்

தமிழில் திரை வாழ்க்கையை தொடங்கினாலும், காந்த கண்களாலும், போதை தரும் உதடுகளாலும் ரசிகர்களை கிறங்கடித்த சில்க் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், படு வேகமாக 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கவர்ச்சியில் தென்னிந்தியத் திரையுலகையே தன் பக்கம் திருப்பி வைத்திருந்த சில்க், குணசித்திர நடிப்பாலும் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளத் தவறவில்லை. கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை போன்ற திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார்.

நடனத்தால் வெற்றி வாகை

1980களில் இவரது நடனம் இடம்பெறாத தமிழ் திரைப்படங்களே இல்லை என்கிற அளவிற்கு உயர்ந்தார். எத்தனையோ திரைப்படங்கள் இவரது கவர்ச்சி நடனத்திற்காகவே வெற்றிவாகை சூடியுள்ளன. லயனம் (1989) என்கிற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் இவரது மற்றொரு வித்தியாசமான பரிணாமத்தினை உலகிற்கு எடுத்து காட்டியது.

இந்தப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கபட்டது குறிப்பிடத்தக்கது. இவரது மற்றொரு நல்ல படமான பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை மிகபெரிய வெற்றியை பெற்றது. கமலஹாசன், ஸ்ரீதேவியுடன் இணைந்து இவர் நடித்த இந்த படம் ஹிந்தியிலும் சத்மா என்கிற பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது.

இவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், ஏன் நடிகர்களுமே கூட காத்திருந்த காலம் அது. அவர் கடித்து வைத்த ஆப்பிளை சாப்பிட போட்டிகள் மூண்ட கனாக் காலமும் அது. அப்படி ஒரு காந்த ஈர்ப்பை தன்னிடம் வைத்திருந்தவர் சில்க்.

மரணத்தை தழுவினார்

பதினேழு ஆண்டுகாலம் தனது ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த சில்க் 1996 ஆம் ஆண்டு செப்டம்பார் மாதம் திடீரென்று ஒருநாள் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவரது மரணத்திற்கு எத்தனையோ காரணங்கள் கூறப்பட்டாலும் இன்றைக்கும் அவரது மரணம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கிறது.

சில்க்கின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள தி டர்ட்டி பிக்சர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கோடானு கோடி ரசிகர்களை கொள்ளை கொண்ட சில்க்கின் நிழலைக் கூட இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள வித்யா பாலன் தொட முடியாது என்பது சில்க்கைத் தெரிந்தவர்கள் கூறும் கூற்று. இருப்பினும், சில்க்கின் வாழ்க்கையை ஒரு ரீவிசிட் செய்ய, நினைத்துப் பார்க்க இந்தப் படம் உதவலாம் என்று எதிர்பார்க்கலாம்.
 

Post a Comment