கார் மோதி பைக்கில் வந்தவர் பலி - பிரபல மலையாள நடிகை கைது!

|


திருவனந்தபுரம்: கருநாகப்பள்ளி அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் பயணி பலியான சம்பவம் தொடர்பாக நடிகை சங்கீதா மோகன் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் கூறுகையில், "கேரள மாநிலம் தழவா குதிரைப்பந்தி பகுதியை சேர்ந்தவர் ஷிபு கோபிநாத் (வயது 43). இவர் கடந்த 22 ந் தேதி இரவு, ஒரு மோட்டார் சைக்கிளில் கருநாகப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாலுகா மருத்துவ மனை பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஷிபு கோபிநாத் மீது ஒரு லாரி ஏறிவிட்டது. இதனால் படுகாயம் அடைந்த ஷிபு கோபிநாத், திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

விசாரணையில், ஷிபு கோபிநாத் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மீது, மலையாள சினிமா மற்றும் டி.வி. நடிகை சங்கீதா மோகன் ஓட்டிய கார் மோதியது தெரிய வந்தது. இந்த நிலையில், நடிகை சங்கீதா மோகன் கருநாகப் பள்ளி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்.

அதைத் தொடர்ந்து போலீசார் நடிகை சங்கீதா மோகனை கைது செய்தனர். அவர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விபத்தில் சிக்கிய காரையும் போலீசார் கைப்பற்றினர்.

குடித்துவிட்டு கார் ஓட்டியவர்

நடிகை சங்கீதா மோகன் இதற்கு முன்பு ஏற்கனவே ஒருமுறை இதே முறையில் விபத்து ஏற்படுத்தியவர். குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது 2009ம் ஆண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

எனவே இந்த முறை அவருடைய டிரைவிங் லைசென்சை ரத்து செய்வது குறித்து போலீசார் பரிசீலனை நடத்தி வருகிறார்கள்.
 

Post a Comment