'வல்லினம்' ஷூட்டிங்கில் துணை நடிகைகளுக்கு பேய் பிடித்ததாகப் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் 'ஈரம்' அறிவழகன் இயக்கும் படம், 'வல்லினம்'. கூடைப்பந்தை மையப்படுத்திய இதில் நகுல் ஹீரோ. அவர் ஜோடியாக பரத நாட்டிய டான்சர் மிருதுளா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் மதுரையிலுள்ள கல்லூரி ஒன்றில் நடந்து வருகிறது. இப்படத்தில் நடிக்கும் துணை நடிகைகள், நடிகர்கள் உட்பட பலர் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவிகளாக நடிக்கும் மூன்று பேருக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பேய் பிடித்ததாகவும் திடீரென்று அவர்கள் ஏதோ உளறியபடி கத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அருகிலுள்ள அறைகளில் தங்கியிருந்தவர்கள் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என நினைத்து சமாதானப்படுத்தினர். ஆனால், அவர்கள் தலைமுடியை அவிழ்த்துவிட்டுவிட்டு ஏதேதோ பேசியதாகவும் தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி படத்தின் இயக்குனர் அறிவழகனிடம் கேட்டபோது, ''பேய் பிடித்ததா என்பது தெரியாது. ஆனால், அவர்கள் இயல்பை மீறி நடந்துகொண்டதாகச் சொன்னார்கள். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது அவர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு விட்டனர்'' என்றார்.
Post a Comment