சிவாஜி, எந்திரனுக்குப் பிறகு 'வேட்டை' படத்துக்கு விமர்சனம் எழுதிய 'நியூயார்க் டைம்ஸ்'!!

|


முதல் முறையாக வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வந்த தமிழ் சினிமா விமர்சனம் ரஜினியின் 'சிவாஜி - தி பாஸ்' (அதற்கு முன் முத்து படம் பற்றி ஜப்பான் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின!). நியூயார்க் டைம்ஸ், பிபிசி, கார்டியன் என பல பத்திரிகைகள் 'சிவாஜி'யை 'அட்டகாசமான பொழுதுபோக்குப் படம்' என எழுதின.

அடுத்து இதே ரஜினியின் எந்திரன் படத்துக்கு உலகின் முக்கியப் பத்திரிகைகள், இணையதளங்கள் அனைத்துமே விமர்சனம் எழுதின. 'இதை ஒரு இந்தியப் படம் என்று நம்பமுடியவில்லை' என்று குறிப்பிட்டிருந்தது அமெரிக்காவின் ஸ்லேட் இணைய இதழ். "புலிக்கும் பெரும் புயலுக்கும் பிறந்த ஒருவர் பூகம்பத்தை திருமணம் செய்துகொண்டால் அவருக்குப் பிறப்பதை ‘ரஜினிகாந்த்’ எனலாம்" என்று ரஜினியை அபாரமாக வர்ணித்து இந்த பத்திரிகை எழுதிய கட்டுரையை இந்தியா டுடே அப்படியே எடுத்தாள அது பெரிய பிரச்சினையானது நினைவிருக்கலாம்!

நியூயார்க் டைம்ஸ் எந்திரனை வெகுவாகப் புகழ்ந்ததோடு, ரஜினியை அபூர்வமான நடிகர் என்றும் குறிப்பிட்டிருந்தது.

ரஜினியின் படங்களுக்குப் பிறகு, முதல் முறையாக தமிழ்ப் படம் ஒன்றிற்கு நியூயார்க் டைம்ஸ் விமர்சனம் எழுதியுள்ளது. அது மாதவன்- ஆர்யா நடித்த பொங்கல் ரிலீஸான 'வேட்டை' படத்துக்கு!

இந்தப் படத்துக்கான விமர்சனத்தில், "தூத்துக்குடி என்ற கடலோர பகுதியில் நடக்கும் இந்தப் படத்தின் கதை தீயசக்தியை வேட்டையாடும் போலீஸை மையப்படுத்தி அமைந்துள்ளது. பொழுதுபோக்கு, சென்டிமென்ட், காதல், விறுவிறுப்பான சண்டைகள், தாளம் போட வைக்கும் பாடல்கள் என ஒரு கச்சிதமான பொழுதுபோக்குப் படம்," என குறிப்பிட்டுள்ளார், விமர்சனத்தை எழுதிய ராச்செல் சால்ஸ்.

நியூயார்க் டைம்ஸ் உலக அளவில் பெரிதும் மதிக்கப்படுகிற, அதிகம் விற்பனையாகிற பத்திரிகைகளுள் ஒன்று.

தமிழ் சினிமாவின் வீச்சு எந்த அளவு அதிகரித்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக பார்க்கப்படுகிறது. இப்படியொரு விமர்சனம் வெளியாக படத்தின் தயாரிப்பாளர்கள் மேற்கொண்ட பப்ளிசிட்டி உத்திகளும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது!

"உலகத்தில் இந்தியா தவிர்த்து, வேறு நாட்டுப் படங்களில் டூயட் இருக்கா, சோகப்பாட்டு இருக்கா.." என்றெல்லாம் கிண்டலடித்து வந்தனர் இங்குள்ள சில விமர்சகர்கள். ஆனால் இப்போதோ, இந்த டூயட்டுகள், குத்துப்பாட்டுகளை சர்வதேச ரசிகர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது. அடுத்து ஏதாவது ஒரு ஹாலிவுட் படத்தில் இந்திய ஸ்டைல் குத்துப்பாட்டு என்று போட்டாலும் வியப்பதற்கில்லை!!
 

Post a Comment