மன்னார்குடி நீதிமன்றத்தில் புவனேஸ்வரி... மேலும் ஒரு தயாரிப்பாளர் மோசடி புகார்!

|


சென்னை: கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது மேலும் ஒரு சினிமா தயாரிப்பாளர் மோசடி புகார் கொடுத்துள்ளார்.

வடபழனி ஆற்காடு ரோட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் குமார் போலீஸ் கமிஷனரிடம் இன்று அளித்த புகார் மனுவில், “நான் ‘திருமங்கலம் பேருந்து நிலையம்’ என்ற படத்தை தயாரித்துள்ளேன்.

கடந்த மே மாதம் நடிகை புவனேஸ்வரி என்னை நேரில் சந்தித்து டெலிவிஷன் தொடர் தயாரிப்பதாகவும் அதை முடிக்க ரூ. 10 லட்சம் தேவை என்றும் கூறினார்.

தான் எடுத்ததாக டி.வி. தொடர் காட்சிகள் சிலவற்றையும் எனக்கு போட்டு காட்டினார். ரூ. 10 லட்சம் கொடுத்தால் இரண்டு மாதத்தில் மேலும் ரூ. 40 ஆயிரம் சேர்த்து பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறினார்.

நான் பணம் கொடுத்தேன். அதற்கு பதில் காசோலைகள் தந்தார். அவற்றை வங்கியில் செலுத்தியபோது பணமின்றி திரும்பி வந்தது. பிறகு பல தடவை பணம் கேட்டு புவனேஸ்வரியை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. அதன் பிறகு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை.

மிரட்டல்

இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் புவனேஸ்வரிக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் நான் சிங்கப்பூர் சென்று விட்டேன். அப்போது வக்கீல்கள் என்ற பெயரில் 4 பேர் எனது அலுவலகத்துக்கு வந்து புவனேஸ்வரிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளனர்.

புவனேஸ்வரி மீதும் மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜரான புவனேஸ்வரி

இதற்கிடையே ரூ 10 லட்சம் செக் மோசடி தொடர்பான மற்றொரு வழக்கில் மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜரானார் புவனேஸ்வரி.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள கோட்டூரைச் சேர்ந்த செல்வக்குமார் மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், புவனேஸ்வரி தனக்குக் கொடுக்க வேண்டிய, ரூ 10 லட்சத்துக்காக அவர் தந்த காசோலை பணமின்றி திரும்பி வந்துவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் நேற்று காலை 10 மணியளவில் மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் புவனேஸ்வரி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஐயப்பன் பிள்ளை, பிப்ரவரி 2ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டார்.

ஏற்கெனவே ரூ 1.5 கோடி மோசடி வழக்கில் புவனேஸ்வரி மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment