டாக்கிங் டைம்ஸ் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பட்டியல் சேகர் தயாரித்துள்ள படம், 'கழுகு'. கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமய்யா, கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தை இயக்கியுள்ள சத்யசிவா கூறியதாவது: கொடைக்கானலில் தற்கொலை செய்துகொள்பவர்களின் பிணங்களைத் தூக்குகிறவர்களின் வாழ்க்கை பற்றிய கதை இது. தற்கொலை என்கிற செய்தியை பேப்பரில் படத்துவிட்டு 'உச்' கொட்டிவிட்டு சென்றுவிடுகிறோம். அதற்கு பின் நடக்கும் விஷயங்கள் கொடூரமானவை. இதை, கொடைக்கானலில் பிணம் தூக்குகிற ஒருவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் சொன்ன தகவல்களின் அடிப்படையில் இக்கதையை உருவாக்கியுள்ளோம். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம். 'அன்றைய காதல் எப்படியிருந்தது, இப்போது எப்படியிருக்கிறது' என்பது பற்றி 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்' என்ற பாடலை சினேகன் எழுதியிருக்கிறார். இது பேசப்படும் விதமாக இருக்கும். படத்தின் டிஐ வேலைகள் மும்பையில் நடந்தது. தமிழ் தெரியாதவர்கள் கலர் கரெக்ஷன் செய்தார்கள். படத்தை பார்த்துவிட்டு எங்கள் டீமை கட்டிப்பிடித்துப் பாராட்டினார்கள். இம்மாத இறுதியில் படம் ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு சத்யசிவா கூறினார்.
Post a Comment